அரசு நிலம் ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும்


அரசு நிலம் ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும்
x
திருப்பூர்


திருப்பூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்தவரிடம் இருந்து நிலத்தை மீட்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

பல கோடி ரூபாய் நிலம் ஆக்கிரமிப்பு

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி முருகம்பாளையம் கிளை செயலாளர் வடிவேலு தலைமையில் மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வீரபாண்டி முருகம்பாளையம் 41-வது வார்டு அண்ணா நகர் பஸ் நிறுத்தம் ஒட்டிய பகுதியில் அரசுக்கு சொந்தமான 50 சென்ட் நிலம் உள்ளது.

இதன் மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும். இந்த நிலத்தை ஒட்டி ஏற்கனவே கடந்த 1990-ல் ஒரே பட்டாவாக 31 பேருக்கு அரசு பட்டா வழங்கியுள்ளது. அந்த பட்டா பெற்ற நபர்கள் இடத்தை விற்றுவிட்டனர். அந்த இடத்தை வாங்கிய நபர், அண்ணா நகர் பஸ் நிறுத்தத்தை ஒட்டிய அரசு நிலத்தையும் வணிக வளாகம் கட்டி ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வீடு இன்றி வாடகை வீட்டில் வசிக்கிறார்கள்.

அப்படியிருக்க தனிநபர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது நியாயமற்றது. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

பத்திரப்பதிவு அலுவலகம்

மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் பொன்னுசாமி அளித்த மனுவில், 'ஆண்டிப்பாளையம், மங்கலம், இடுவாய் போன்ற கிராமங்களை 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நெருப்பெரிச்சல் பத்திரப்பதிவு அலுவலகத்துடன் இணைத்துள்ளனர். இவர்கள் பத்திரப்பதிவு செய்ய நெருப்பெரிச்சல் செல்ல பஸ் வசதியில்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். நல்லூர் பதிவு அலுவலகத்தில் மிக குறைந்த வருவாய் கிராமங்கள் மட்டுமே உள்ளன. திருப்பூர், ஆண்டிப்பாளையம், மங்கலம், இடுவாய் கிராமங்களை நல்லூர் பதிவு அலுவலகத்துக்கு மாற்றினால் மக்கள் பயன்பெறுவார்கள்.

கடந்த 1 வருடமாக மனு கொடுத்து முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இனியும் நடவடிக்கை இல்லை என்றால் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என்று கூறியுள்ளனர்.

சீமானை கைது செய்ய வேண்டும்

தமிழ்புலிகள் கட்சியினர் அளித்த மனுவில், 'பல்லடம் வாலிபாளையம் முத்தூர் பகுதியில் அரசு நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்து தேங்காய் களம் அமைத்து தொழில் செய்து வருகிறார்கள். அந்த நிலத்தை மீட்டு ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையினர் அளித்த மனுவில், 'ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததிய மக்களை இழிவாக பேசியுள்ளார்.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் அவரை கைது செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளனர்


Next Story