என்எல்சி சுரங்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி:அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து 2 எம்எல்ஏக்கள் வெளிநடப்புவிவசாயிகளும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
என்.எல்.சி. சுரங்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து 2 எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் விவசாயிகளும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வடலூர்,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்து என்.எல்.சி. அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் வடலூாில் நடைபெற்றது. இதற்கு தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சபா.ராஜேந்திரன், வேல்முருகன், அய்யப்பன், அருண்மொழிதேவன், ராதாகிருஷ்ணன், சிந்தனைச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. துரை கி.சரவணன், என்.எல்.சி. நிர்வாக இயக்குனர் சதீஷ் பாபு, என்.எல்.சி.நில எடுப்புத்துறை அதிகாரிகள் விவேகானந்தன், கதிர்வேல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், அனைத்து கட்சி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆனால் விவசாயிகள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.க்கள் பண்ருட்டி வேல்முருகன், அருண்மொழிதேவன் ஆகியோர் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தனர்.
சாலை மறியல்
இதற்கிடையே நில எடுப்பு சம்பந்தமான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் குறித்து அறிந்த நெய்வேலி அருகே உள்ள கத்தாழை, கரிவெட்டி, கீழ்வளையமாதேவி, மேல்வளையமாதேவி, கங்கைகொண்டான் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பெண்கள் வடலூருக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள், அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்காததை கண்டித்து வடலூரில் சென்னை-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர்.
இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பும் ஏற்பட்டது.