மதுரை-தூத்துக்குடி அகல ரெயில்பாதைக்கு 10 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி- வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு


மதுரை-தூத்துக்குடி அகல ரெயில்பாதைக்கு  10 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி- வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு
x

மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு புதிய அகல ரெயில்பாதை அமைப்பதற்கு திருப்பரங்குன்றம் உள்பட 10 கிராமங்களில் 210 ஏக்கர் நிலம் கையப்படுத்துவதற்காக உரிய இடத்தை வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்,


மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு புதிய அகல ரெயில்பாதை அமைப்பதற்கு திருப்பரங்குன்றம் உள்பட 10 கிராமங்களில் 210 ஏக்கர் நிலம் கையப்படுத்துவதற்காக உரிய இடத்தை வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மதுரை-தூத்துக்குடி

தென்மாவட்டத்தின் பிரதான தொழில்நகரமான மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்கள் சார்ந்து சுமார் 143 கி.மீ. தூரத்திற்கு அகல ரெயில்பாதை அமைப்பதற்கு ரெயில்வே துறை முன்வந்தது. இதற்காக கடந்த 1999-2000-ம் ஆண்டில் திட்டம் வகுக்கப்பட்டது. மேலும் புதிய அகல ரெயில்பாதையை ரூ.800 கோடியில் உருவாக்குவது என்று திட்ட மதிப்பீடு வரையறுக்கப்பட்டது. இதற்காக மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டது.

அதில் மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம், பாரப்பத்தி, ஆவியூர், காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், குளத்தூர், மேலமருதூர், வாலசமுத்திரம், சில்லாநத்தம், சாமநத்தம், தட்டாபாறை, மீளவிட்டான் வழியாக தூத்துக்குடி ரெயில்நிலையம் வரை புதிய ரெயில்பாதை அமைப்பது என்று உத்தேசிக்கப்பட்டது.

முதற்கட்டமாக

அருப்புக்கோட்டை உள்ளிட்ட 5 இடங்களில் ரெயில்நிலயம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதில் தூத்துக்குடியில் இருந்து மேலமருதூர் வரையிலும் முதற்கட்டமாகவும், மேலமருதூரில் இருந்து குளத்தூர், விளாத்திகுளம், வழியே அருப்புக்கோட்டை வரை 2-ம் கட்டமாகவும், அருப்புக்கோட்டையில் இருந்து திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் பிரிவு வரையிலுமாக 3-ம் கட்டமாகவும் ரெயில்பாதை அமைப்பது என்று திட்டமிடப்பட்டது.

அதன்படி முதற்கட்டமாக மேலமருதூர் வரை புதிய ரெயில்பாதை அமைக்கப்பட்டது. அருப்புக்கோட்டை, திருப்பரங்குன்றம் பகுதியில் நிலம் கையகப்படுத்தாத நிலையில் பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு எதிர்ப்பார்ப்பிலுமாக சுணக்கம் ஏற்பட்டு புதியபாதை அமைப்பது கடந்தபல ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது.

ஆய்வு

இந்த நிலையில் சமீபத்தில் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கிடையில் திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் அய்யனார் கோவில் பிரிவில் இருந்து சூரக்குளம், ஆலங்குளம், வலையன்குளம், பாரபத்தி, வலையப்பட்டி உள்ளிட்ட 10 கிராமங்களில் புதிய ரெயில்பாதைக்காக திருப்பரங்குன்றம் தாலுகாவில் மட்டும் 210 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இதனையொட்டி மதுரை டி.ஆர்.ஓ. சக்திவேல், திருப்பரங்குன்றம் தாலுகா தாசில்தார் பார்த்திபன், மண்டல துணை தாசில்தார் மாதவன், வட்ட சார்பு ஆய்வாளர் ரகுபதி, ரெவின்யூ இன்ஸ்பெக்டர் ரமேஷ், கிராம நிர்வாக அதிகாரி கந்தவேல் ஆகியோர் உரிய இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் மதுரை-திருமங்கலம் இடையிலான அகல ரெயில்பாதை இடம் ரெயில்வே துறைக்கு ஒப்படைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story