போலி ஆவணம் தயாரித்து நில மோசடி; 6 பேர் மீது வழக்கு
போலி ஆவணம் தயாரித்து நில மோசடி; 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி சுப்பிரமணியபுரம் ஹைவேஸ்காலனியை சேர்ந்தவர் சேகர்(வயது 43). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அளுந்தூரில் 2 ஏக்கர் 55 சென்ட் நிலத்தை ஒருவரிடம் இருந்து விலைக்கு வாங்கி இருந்தார். ஆனால் அந்த நிலத்தை திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த பங்குராஜின் மனைவி தெரசா பெயருக்கு உயில் எழுதி கொடுத்து இருந்ததாக போலி பத்திரம் தயார் செய்து கொண்டனர். இதற்கு நாகமங்கலத்தை சேர்ந்த ராமன் என்பவர் சாட்சி கையெழுத்து போட்டிருந்தார். பின்னர் கடந்த 2007-ம் ஆண்டு மேற்படி நிலத்தில் 80 சென்ட் இடத்தை மட்டும் பங்குராஜ், தெரசா ஆகியோர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவருக்கு விலைக்கு விற்றுள்ளனர்.
இதற்கு மேலகல்கண்டார்கோட்டையை சேர்ந்த கணேசன், பெரியமிளகுபாறையை ேசர்ந்த வேல் ஆகியோர் சாட்சிகளாக இருந்துள்ளனர். ஆனால் பங்குராஜ் அந்த நிலத்தை விஸ்வநாதன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து தரவில்லை. இதையடுத்து விஸ்வநாதன் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில், அந்த நிலம் விஸ்வநாதனுக்கு பதிவு செய்து கொடுக்கப்பட்டது. இது பற்றி அறிந்த நிலத்தின் உரிமையாளரான சேகர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில், பங்குராஜ், விஸ்வநாதன், தெரசா, ராமன், கணேசன், வேல் ஆகிய 6 பேர் மீது திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.