'சந்திரயான்-3' விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது 'லேண்டர்'


சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது லேண்டர்
x

‘சந்திரயான்-3’ விண்கலத்தில் இருந்து ‘லேண்டர்’ வெற்றிகரமாக பிரிந்தது. திட்டமிட்டபடி நிலவில் தரை இறக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை,

'சந்திரயான்-3' விண்கலத்தை ரூ.615 கோடி செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 'எல்.வி.எம்.3 எம்4' ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14-ந்தேதி இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

40 நாள் பயணம்

நிலவின் தென் துருவப்பகுதி ஆய்வு பணிக்கான இந்த முயற்சி வெற்றிகரமாக நடந்தது.

இதையடுத்து 'சந்திரயான்-3' விண்கலம் 40 நாள் பயணமாக புவி சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்று வட்டப்பாதையின் இறுதி கட்டத்தை எட்டியது. இதனை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தரைகட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.

புவிவட்ட சுற்றுப்பாதை

'சந்திரயான்-3' விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட அன்று புவிவட்ட சுற்றுப்பாதையில் முதல் கட்டமாக 41 ஆயிரத்து 762 கி.மீ. அதிகபட்சமாகவும், குறைந்தபட்சம் 173 கி.மீ. தொலைவிலும் சுற்றி வந்தது. இதனை படிப்படியாக உயர்த்தும் பணி நடந்தது. பெங்களூரு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப்பாதையை நீட்டிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி கடந்த மாதம் 15-ந்தேதி 2-ம் கட்டமாக அதிகபட்சமாக 60 ஆயிரம் கி.மீ. தொலைவிலும், குறைந்தபட்சம் 226 கி.மீ. தொலைவிலும் சந்திரயான்-3 விண்கலம் சுற்றி வந்தது. தொடர்ந்து 3-வது கட்டமாக அதிகபட்சமாக 71 ஆயிரத்து 351 கி.மீ., குறைந்தபட்சம் 233 கி.மீ.சுற்றுப்பாதையில் விண்கலம் பயணித்து வந்தது.

நிலவு வட்டசுற்றுப்பாதை

படிப்படியாக உயர்த்தப்பட்டு வந்த விண்கலம், கடந்த 1-ந்தேதி நிலவு வட்ட சுற்றுப்பாதையில் குறைந்தபட்சம் 288 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சம் 3 லட்சத்து 69 ஆயிரத்து 328 கி.மீ. தொலைவிலும் சுற்றி வந்தது.

இந்நிலையில் கடந்த 5-ந்தேதி நிலவு சுற்றுவட்டப்பாதையில் குறைந்தபட்சம் 164 கி.மீ., அதிகபட்சம் 18 ஆயிரத்து 74 கி.மீ. என்ற அளவில் உயரம் குறைக்கப்பட்டது. தொடர்ந்து மீண்டும் உயரம் குறைக்கும் பணியில் குறைந்தபட்சம் 170 கி.மீ., அதிகபட்சம் 4 ஆயிரத்து 313 கி.மீ. என்ற அளவில் சந்திர யான்-3 விண்கலம் நிலவை சுற்றி வந்தது.

நிலவுக்கு அருகில்...

இதையடுத்து கடந்த 9-ந் தேதி மீண்டும் உயரம் குறைக்கப்பட்டதில், குறைந்தபட்சம் 174 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சம் 1,437 கி.மீ. தொலைவிலும் பயணித்தது. தொடர்ந்து கடந்த 14-ந்தேதி உயரம் குறைப்பு பணியில் குறைந்த பட்சம் 151 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சம் 179 கி.மீ. என்ற சுற்றுப்பாதையிலும் சுற்றி வந்தது. நேற்றுமுன்தினம் காலை 8.30 மணி அளவில் மீண்டும் உயரம் குறைக்கப்பட்டது.

இதன்படி குறைந்தபட்சம் 153 கி.மீ. தொலைவிலும், அதிக பட்சம் 163 கி.மீ. என்ற அளவிலும் சுற்றி வந்தது. தற்போதைய நிலையில், 'சந்திரயான்-3' விண்கலம் 100 கி.மீ. தொலைவிலான நிலவு அடுக்குக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

'லேண்டர்' வெற்றிகரமாக பிரிந்தது

இதனைத்தொடர்ந்து விண்கலத்தில் உள்ள உந்துவிசை தொகுதியில் இருந்து தரைஇறங்கும் 'விக்ரம் லேண்டரை' தனியாக பிரிக்கும் நடவடிக்கையில் விஞ்ஞானிகள் நேற்று இறங்கினர். அதன்படி, நிலவை நெருங்கிய நிலையில் 'சந்திரயான்-3' விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து அவை இரண்டும் தனித்தனி பயணங்களை தொடங்கியது.

தற்போது நிலவு சுற்றுப்பாதையில் குறைந்தபட்சம் 153 கி.மீ., அதிகபட்சம் 163 கி.மீ. என்ற தொலைவில் விக்ரம் லேண்டர் பயணித்து வருகிறது. படிப்படியாக இதன் உயரம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

23-ந்தேதி நிலவில் தரை இறங்கும்

இதையடுத்து லேண்டரை நிலவில் எங்கு தரையிறக்குவது பற்றி விஞ்ஞானிகள் முடிவு செய்வார்கள். இதற்காக நிலவில் தரை இறங்குவதற்கான இடங்களை லேண்டர் புகைப்படம் எடுத்து அனுப்பியது. இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

இந்த நிலையில் திட்டமிட்டபடி 23-ந்தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் 'சந்திரயான்-3' விண்கலத்தை தரை இறக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story