தொண்டி பகுதியில் சீரமைப்பு பணிக்காக விசைப்படகுகள் கரையேற்றம்


தொண்டி பகுதியில் சீரமைப்பு பணிக்காக விசைப்படகுகள் கரையேற்றம்
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி தொண்டி பகுதியில் விசைப்படகுகளை கரையேற்றி சீரமைப்பு பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம்

தொண்டி,

மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி தொண்டி பகுதியில் விசைப்படகுகளை கரையேற்றி சீரமைப்பு பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சீரமைப்பு பணி

தமிழக அரசு மீன் பிடி தடைக்காலத்தை அறிவித்துள்ளதை தொடர்ந்து இப்பகுதியில் உள்ள விசைப்படகுகள் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை பராமரிப்பதற்கு உரிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் பழுது பார்க்க வேண்டிய விசைப்படகுகள் தொழிலாளர்கள் மூலம் கரையேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் படகுகளின் மேற்பாகங்களில் சீரமைத்தல், கயிறுகள் சரி செய்தல், என்ஜின் பழுது பார்த்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து சோளியக்குடி லாஞ்சியடி மீனவர் கோபி கூறியதாவது:- மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து படகுகள் சீரமைக்கும் பணியில் விசைப்படகு மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றோம். சிறிய அளவிலான பழுது நீக்குவதற்கு ரூ.1.50 லட்சம் வரையும், பெரிய அளவிலான பழுது நீக்க ரூ.6 லட்சம் வரை செலவாகும்.

அனைத்து படகுகளுக்கும் தடை

இதனால் தமிழக அரசு மீன் துறை மூலம் படகு உரிமையாளர்களுக்கு தடைக்கால நிவாரண உதவியாக ரூ.50 ஆயிரம் வழங்கினால் பெரிதும் உதவியாக இருக்கும். மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளுக்கு மட்டும் தடை போடாமல் என்ஜின் பொருத்தப்பட்ட எல்லா படகுகளுக்கும் தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது 3 மாத காலத்திற்கு மீன்பிடி தொழில் நல்ல முறையில் இருக்கும்.

என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகுகளில் எல்லாவிதமான வலைகளையும் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் தடைக்காலத்திற்கு பின்னர் விசை படகுகளுக்கு பெரிய அளவில் தொழில் இருப்பதில்லை. இதனை அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தடைக்காலம் முடிந்து கடலுக்கு செல்லும் போது விசைப்படகுகள் மூலம் பிடித்து வரப்படும் மீன்களுக்கு ஏற்றுமதி நிறுவனங்கள் ஒரு வார காலத்திற்கு விலையை நிர்ணயம் செய்வதே இல்லை. இந்த ஒரு வார காலத்தில் ஏற்றுமதி நிறுவனங்கள் பெருமளவில் சம்பாதித்து விடுவார்கள். இதனால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

விலை நிர்ணயம்

இதுகுறித்து விசைப்படகு மீனவர்கள் பலமுறை தமிழக அரசிற்கும், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுநாள் வரை எடுக்கப்படவில்லை. எனவே வரும் காலத்திலாவது அரசு இதனை முறைப்படுத்தி ஏற்றுமதி நிறுவனங்களை அழைத்து பேசி தடைக்காலம் முடிந்து கடலுக்கு மீனவர்கள் செல்லும்போதே விலையை நிர்ணயம் செய்துவிட வேண்டும் என்ற உத்தரவை அரசு அறிவிக்க வேண்டும். அப்போதுதான் விசைப்படகு மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றார்.


Next Story