இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்கக்கோரி நில உரிமையாளர்கள் வாக்குவாதம்


இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்கக்கோரி நில உரிமையாளர்கள் வாக்குவாதம்
x

வாலாஜா சுங்கச்சாவடி நிலஎடுப்பு விவகாரத்தில் நிலத்துக்கு இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்கக்கோரி அதிகாரிகளிடம் நிலத்தின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

சுங்கச்சாவடி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சென்னசமுத்திரம் பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடி விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. இதற்கான அந்த பகுதியில் இருந்த சுமார் 22 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. அந்த நிலத்தை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது உரிமையாளர்களுக்கு நிலத்துக்கு குறைந்த இழப்பீடு வழங்க தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் தங்களது நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அரசு தரப்பில் நிர்ணயிக்கப்பட்ட தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இந்த தொகை குறைந்த தொகை என உரிமையாளர்கள் கருதினர். இதனிடையே இதுதொடர்பாக வழக்கும் கோர்ட்டில் தொடரப்பட்டது.

வாக்குவாதம்

இந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான விசாரணை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. சிறப்பு நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட நிலத்தின் உரிமையாளர்கள் தங்களது நிலத்துக்கு அரசு வழங்கும் இழப்பீடு போதுமானதாக இல்லை. எனவே 2019-ம் ஆண்டில் நிர்ணயம் செய்த தொகையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அப்போது அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் உங்களது கோரிக்கையை மனுவாக கொடுங்கள். அதை நாங்கள் உயர்அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறோம் என்றனர்.

இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர்கள் கூறுகையில், பிற இடங்களில் சுங்கச்சாவடிக்கு நிலம் கையகப்படுத்தும்போது உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால் வாலாஜா சுங்கச்சாவடிக்கு மட்டும் குறைந்த இழப்பீடு வழங்கப்படுகிறது. எனவே உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.


Next Story