சமாதான கூட்டத்தில் இருந்து நில உரிமையாளர்கள் வெளிநடப்பு
சமாதான கூட்டத்தில் இருந்து நில உரிமையாளர்கள் வெளிநடப்பு செய்தனர்
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலைக்காக சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என நில உரிமையாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக நேற்று சீர்காழி உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் அர்ச்சனா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பாண்டியன், திட்ட இயக்குனர் சக்திவேல், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், நிலஎடுப்பு தாசில்தார் இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அல்லிவிளாகம், காரைமேடு, காத்திருப்பு, கருவி, தளச்சங்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நில உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். நிலம் வழங்கியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நில உரிமையாளர்கள் வலியுறுத்தினர். ஆனால் சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளும் நகாய் நிறுவனம் மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து நில உரிமையாளர்கள் பண்டரிநாதன், முத்துக்குமார், தியாகராஜன், தென்னரசு, ராஜாங்கம் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால், கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.