தொடர் மழையால் மன்னவனூரில் மண் சரிவு
கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் மன்னவனூரில் மண் சரிவு ஏற்பட்டது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் குளுகுளு சீசன் நிறைவடைந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருப்பினும் அவ்வப்போது ஆதவனின் ஒளிக்கதிர்கள் மலைப்பகுதியில் விழுந்தது. அப்போது சூரியனை சுற்றி ஒளிவட்டம் தோன்றியது. இதனை ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்ததுடன், தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு மேல்மலை பகுதியில் பெய்த மழையின் காரணமாக மன்னவனூரில், கைகாட்டி என்ற பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த மண் சரிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதியில் பகல் நேரத்திலும் கடும் குளிர் நிலவி வருகிறது.