எமரால்டில் நிலச்சரிவு
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. எமரால்டில் உள்ள விளைநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 3 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. எமரால்டில் உள்ள விளைநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 3 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்தது.
ராட்சத மரம் விழுந்தது
நீலகிரி மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு பின்னர் நேற்று மழை சற்று குறைந்தது. இருப்பினும், இரவு நேரங்களில் கடும் சூறாவளி காற்றுடன் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. ஊட்டி வண்டிச்சோலை பகுதியில் ராட்சத மரம் முறிந்து சாலை மற்றும் மின்கம்பம் மீது விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன், தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரி சந்தோஷ்குமார் தலைமையிலான 2 குழுக்களுடன், மின்வாரிய ஊழியர்களும் இணைந்து செயல்பட்டு மரம் அறுக்கும் எந்திரம் மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் மரத்தை அகற்றினர்.
அசம்பாவிதம் தவிர்ப்பு
இதேபோல் ஹில்பங்க் பகுதியில் பெரிய மரம் விழுந்தது. அந்த வழியாக தினமும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் சென்று வரும் நிலையில், நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனவே, அப்பகுதியில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளான புதுமந்து சாலை, மான் பூங்கா ஆகிய பகுதிகளில் மரங்கள் விழுந்தன. இதனை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர். இதேபோல் பார்சன்ஸ்வேலி அணைக்கு செல்லும் பகுதியில் மின் கம்பங்கள் மீது, அவ்வப்போது மரங்கள் விழுவதால் அங்கிருந்து குடிநீர் வினியோகம் செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.
நிலச்சரிவு
அவலாஞ்சி, எமரால்டு, குந்தா பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று எமரால்டு-மஞ்சூர் சாலை அவலாஞ்சி சந்திப்பு அருகே காந்தி கண்டி பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான விளைநிலத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த தேயிலை செடிகள், கேரட் உள்ளிட்ட பயிர்கள் அடித்து செல்லப்பட்டன. அந்த சமயம் யாரும் தோட்டத்தில் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
தோட்டம் சரிந்து தண்ணீர் செல்லும் கால்வாயில் விழுந்தது. இதனால் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதன் காரணமாக விவசாயிக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் சாலையையொட்டி நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால், சாலை பெயரும் அபாயம் உள்ளது. எடக்காடு பகுதியில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் மண் அகற்றப்பட்டது.
அணைகள் திறப்பு
இத்தலார்-போர்த்தி சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. எம்.பாலாடா, ஓசகட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மலைகாய்கறிகள் மகசூல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதேபோல் தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. முத்தோரை பகுதியில் வீட்டின் அருகே நிறுத்தி இருந்த கார் மீது மரம் விழுந்தது.
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பும் தருவாயில் இருப்பதால், அணைகள் எந்த நேரத்திலும் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிளன்மார்கன் அணையின் ஒரு பகுதியில் பக்கவாட்டு சுவர் பலவீனமாக இருப்பதால், அந்த அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. குந்தா அணையில் இருந்து டனல் வழியாக தண்ணீர் வெளியேற்றி பில்லூர் அணைக்கு 2-வது நாளாக திறக்கப்பட்டு உள்ளது.