பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு: அந்தியூர்-அம்மாபேட்டை பகுதியில் 125 ஏக்கரில் பயிர்கள் மூழ்கின; மோட்டார்சைக்கிளுடன் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டவர் உயிருடன் மீட்பு
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த பலத்த மழை காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதுடன், அந்தியூர் மற்றும் அம்மாபேட்டை பகுதியில் 125 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் மூழ்கின. மேலும் அந்தியூர் அருகே மோட்டார்சைக்கிளுடன் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த பலத்த மழை காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதுடன், அந்தியூர் மற்றும் அம்மாபேட்டை பகுதியில் 125 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் மூழ்கின. மேலும் அந்தியூர் அருகே மோட்டார்சைக்கிளுடன் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
அந்தியூர்
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து நேற்று காலை வினாடிக்கு 2 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் வெளியேறியது. இதன்காரணமாக கெட்டிசமுத்திரம் ஏரி நிரம்பி அதன் உபரி நீர் பர்கூர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்தியூரில் இருந்து பர்கூர் மற்றும் கர்நாடக மாநிலம் மைசூருக்கு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி கெட்டிசமுத்திரம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரானது அந்தியூர் பெரிய ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது.
போக்குவரத்து பாதிப்பு
பலத்த மழை காரணமாக அந்தியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பரப்பளவில் பயிரிடப்பட்டு உள்ள நெல், கரும்பு, மக்காச்சோளம், பருத்தி போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
மேலும் மழை காரணமாக அந்தியூர் பெரியார் நகர், கண்ணப்பன் கிணற்று வீதி, அந்தியூர் பஸ் நிலையம் பகுதி, அண்ணா மடுவு ஆகிய பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
எம்.எல்.ஏ. அலுவலகத்தை...
அந்தியூரில் இருந்து பவானி ஈரோடு செல்லும் சாலையில் அண்ணாமடுவு என்ற பகுதியில் வெள்ளம் பெருக்்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து அனைத்தும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.
மேலும் அந்தியூர் பெரிய ஏரியில் இருந்து அதிக அளவில் உபரிநீர் ெவளியேறியதால் அண்ணாமடுவு பகுதியில் உள்ள அந்தியூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தை வெள்ளம் சூழ்ந்தது.
மண் சரிவு
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பர்கூர் மலைப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வேருடன் மரங்கள் சரிந்ததுடன், மண் சரிவும் ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் அந்தியூரில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூரு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதேபோல் மைசூருவில் இருந்து அந்தியூர் வரக்கூடிய அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின் கம்பம் சாய்ந்தது.
இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று சாய்ந்து விழுந்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில், பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை அள்ளும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட...
அந்தியூர் பெரிய ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறியதால் அந்தியூர்- வெள்ளித்திருப்பூர் ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை வெள்ளித்திருப்பூரில் இருந்து அந்தியூருக்கு மோட்டார்சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அந்தியூர் பெரிய ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீரானது அந்தியூர்- வெள்ளத்திருப்பூர் ரோட்டில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்றது. அந்த வழியாக யாரும் செல்லக்கூடாது என்பதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் போலீசாரும் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்தனர். ஆனால் போலீசார் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையையும் மீறி தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்ற தண்ணீரை பற்றி கவலைப்படாமல் அதை கடக்க மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர் முயன்றார். தரைப்பாலத்தில் சிறிது தூரம் சென்றதும் மோட்டார்சைக்கிளுடன் அவரை வெள்ளம் இழுத்து சென்றது. இதை கண்டதும் அங்கிருந்து பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு மனித சங்கிலி போல் கை கோர்த்தபடி சென்று மோட்டார்சைக்கிளில் வந்தவரை உயிருடன் மீட்டனர். மேலும் மோட்டார்சைக்கிளையும் மீட்டனர். அந்தியூர் பகுதியில் நேற்று முன்தினம் 80 மில்லி மீட்டர் மழை பெய்தது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட சென்னம்பட்டி, மாத்தூர், வெள்ளித்திருப்பூர், குறிச்சி, சனி சந்தை, கிட்டம்பட்டி, ஜரத்தல், தொட்டிக்கிணறு, கொமராயனூர், முரளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கன மழையாக பெய்தது. இதனால் பூணர்ச்சி பெரிய ஏரி, முகாசி புதூர் ஏரி, தாமரை ஏரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி அதில் இருந்து உபரி நீர் வெளியேறி சித்தார் ஓடை வழியாக காவிரி ஆற்றை சென்றடைந்தது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், 'நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு பெய்த கனமழையின் காரணமாக சென்னம்பட்டி வனப்பகுதி மற்றும் பாலமலை வனப்பகுதி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தண்ணீரும் மழை தண்ணீரும் ஒன்றாக சேர்ந்து இங்குள்ள பள்ளங்களில் காட்டாறு வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளம் காரணமாக சென்னம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவிலான வயல்களுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. இதனால் நெல், வெங்காயம், மஞ்சள் போன்றவை நீரில் மூழ்கி உள்ளன. இதேபோல் வாழை தோட்டம், பருத்தி பயிரிட்டு உள்ள விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்து உள்ளது. தண்ணீர் வடிந்த பின்னர் பயிர்களின் முழு சேத விவரம் தெரியவரும்.
இந்த மழையால் சென்னம்பட்டி பகுதியில் வனத்தை ஒட்டியுள்ள மிகப்பெரிய ஏரியான ஜரத்தல் இரட்டை கரடு ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. கடந்த 1999-ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஏரி தற்போதுதான் நிரம்பி உள்ளது. கடந்த 23 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த ஏரியில் உள்ள மதகு பழுதடைந்து காணப்படுவதால் அதன் வழியாக தண்ணீர் கசிவு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னம்பட்டி வனச்சரக அலுவலர் ராஜா, சென்னம்பட்டி ஊராட்சி தலைவர் சித்ரா செல்வன் ஆகியோர் விரைந்து செயல்பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் தண்ணீர் கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த மழையின் காரணமாக ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சென்னம்பட்டி, குருவரெட்டியூர் ரோட்டில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தீவுபோல் காட்சி அளிக்கும் கிராமம்
அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூர் முத்துக்கவுண்டன் புதூர் காலனி பகுதியில் 50 குடும்பத்தை சேர்ந்த 150 பேர் வசித்து வருகிறார்கள். இந்த ஊருக்கு பூசாரியூர் வழியாக செல்ல ரோடு உள்ளது. இந்த ரோட்டில் தான் சித்தார் ஓடையும் செல்கிறது. இந்த ஓடையின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அம்மாபேட்டை பகுதியில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக சித்தார் ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் சித்தார் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கிராமத்துக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'முத்துக்கவுண்டன் புதூர் காலனிக்கு பூசாரியூரில் இருந்துதான் செல்ல வேண்டும். இந்த ஒரு ரோடுதான் எங்களுடைய முக்கிய ரோடாக உள்ளது. மழைகாரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்த படி வெள்ளம் செல்வதால் எங்களால் கிராமத்தை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலை உள்ளது. காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். இங்குள்ள மாணவ- மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு செல்ல முடியவில்லை. எங்கும் செல்ல முடியாததால் ஒரு தீவுக்குள் சிக்கியது போன்று நாங்கள் உள்ளோம். எங்களில் பெரும்பாலானவர்கள் கூலித்தொழிலாளர்களே. எனவே வீட்டில் இருக்கின்ற உணவு பொருட்களை வைத்து சமைத்து சாப்பிடுகிறோம். மழை மேலும் தொடர்ந்தால் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் குழந்தைகள் முதல் ெபரியவர்கள் வரை அனைவரும் அவதிப்படுவோம். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தற்காலிகமாக எங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். மேலும் இங்கு உயர்மட்ட பாலம் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என வேண்டுகோள் விடுத்தனர்.
தாளவாடி
தாளவாடி மற்றும் ஆசனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மிதமான மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆசனூர் திம்பம், தலமலை, குளியாடா, தேவர்நத்தம் மற்றும் வனப்பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் ஓடைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆசனூரில் இருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகால் செல்லும் சாலையில் அரேபாளையம் பிரிவு அருகே உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றது. மேலும் அந்த பாலத்தின் அருகே உள்ள பழமையான மரம் ஒன்றும் சாலையில் சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் தாளவாடியில் இருந்து மல்லங்குழி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கோபி
கோபி அருகே உள்ள காசிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் அங்குள்ள ஈரோடு- சத்தியமங்கலம் மெயின் ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் தண்ணீர் குளம் போல தேங்கி நின்றது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் வழி ஏற்படுத்தி தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் போக்குவரத்து சீரானது.
பவானிசாகர்
பவானிசாகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் திடீரென்று இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்திலேயே சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. விடியும்வரை கொட்டித் தீர்த்த மழையால் பவானிசாகர் பகுதியில் குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை ஏற்பட்டு உள்ளது. இந்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பவானிசாகர் பகுதியில் 59 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
விவசாய நிலங்களில் புகுந்தது
பவானிசாகர் அணையில் இருந்து வரும் கீழ்பவானி வாய்க்கால் அறச்சலூர் அருகே 2- ஆக பிரிந்து சென்னசமுத்திரம் பகுதிக்கும் மற்றொரு பிரதான வாய்க்கால் சென்னிமலை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைமடை பகுதியான மங்களப்பட்டி வரைக்கும் செல்கிறது. கீழ்பவானி வாய்க்காலில் கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் நாற்று நடவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சமீபத்தில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் உபரி நீரே விவசாயிகளுக்கு போதுமானதாக இருந்தது.
தற்போது கீழ்பவானி வாய்க்காலின் கடைமடை பகுதியான திருப்பூர் மாவட்டம் மங்களப்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்ததால் அங்கு விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து விட்டதாக கூறப்படுகிறது.
பாதி அளவு தண்ணீர் வெளியேற்றம்
அதனால் கீழ்பவானி வாய்க்காலில் வரும் தண்ணீரை சில நாட்கள் பாதியாக குறைக்குமாறு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதனால் சென்னிமலை அருகே அய்யம்பாளையம் பகுதியில் உள்ள முதலைமடை என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து பாதி அளவு தண்ணீரானது உபரி நீர் கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டது. அவசர காலங்களில் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து மாற்று வழியில் தண்ணீரை வெளியேற்றுவதற்காக முதலைமடை பகுதியில் வாய்க்காலின் குறுக்கே ஷட்டர் அமைக்கப்பட்டு உள்ளது.
நீரில் மூழ்கின
தற்போது இந்த ஷட்டர்களை பயன்படுத்தி வெளியேற்றப்படும் தண்ணீர் அருகில் உள்ள ஜெ.ஜெ.நகர் தடுப்பணைக்கு சென்று அதுவும் நிரம்பிவிட்டது. பின்னர் அங்குள்ள ஓடை வழியாக செல்லும் தண்ணீர் மேட்டூர், சரளைக்காடு, எக்கட்டாம்பாளையம் வழியாக சென்று நொய்யல் ஆற்றில் கலந்து வருகிறது. ஓடையில் தண்ணீர் அதிகமாக சென்றதால் மேட்டூர் மற்றும் சரளைக்காடு பகுதியில் உள்ள தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின.
மேலும் ஓடையின் அருகில் உள்ள 10 ஏக்கர் பரப்பளவிலான நெல் வயல்கள் மற்றும் வாழைத்தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வயல்கள் தண்ணீரில் மூழ்கின.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தை அடுத்த குத்தியாலத்தூர் மலைப்பகுதியில் கோட்டமாளம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி கோபியம்மாள். கோட்டமாளத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கோபியம்மாள் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக அந்த பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக நாகராஜ் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. நாகராஜ், கோபியம்மாள் ஆகியோர் வேலைக்கு சென்றுவிட்டதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.