ராமேசுவரம் கோவிலில் தரிசன பாதைகள் கம்பிகள் வைத்து அடைப்பு


ராமேசுவரம் கோவிலில் தரிசன பாதைகள் கம்பிகள் வைத்து அடைப்பு
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 10 Jan 2023 6:46 PM GMT)

ராமேசுவரம் கோவிலில் தரிசனம் செய்யும் பாதைகள் தடுப்பு கம்பிகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலில் தரிசனம் செய்யும் பாதைகள் தடுப்பு கம்பிகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கம்பிகள் வைத்து அடைப்பு

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பிரகாரங்களில் பல்வேறு பாதைகளில் தடுப்பு கம்பிகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் உள்ளூரை சேர்ந்த பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய சென்றுவர முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் பிரபாகர் முதல்-அமைச்சருக்கு தபால் மூலம் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் சாமி சன்னிதி பிரகாரங்களில் பக்தர்கள் சுற்றிவர முடியாத அளவுக்கு தடுப்பு கம்பிகளை வைத்து பாதைகள் மறைக்கப்பட்டுள்ளது. இலவச தரிசன பாதையிலும் பக்தர்கள் இலவச தரிசனத்தில் செல்ல முடியாத அளவுக்கு கட்டண தரிசன பாதையாக மாற்றி அமைப்பது மட்டுமல்லாமல் ஆகம விதிமுறைகளை மீறி கோவில் மூடப்பட்ட பின்பும் கோவில் பணியாளர்களை வைத்து கோவிலுக்குள் வேலை பார்க்கும் செயல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

முதல்-அமைச்சர் நடவடிக்கை

கோவிலில் நடைபெற்று வரும் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தில் பக்தர்களுக்கு தூய்மை பணியாளர்கள்தான் சீருடை அணிந்து அன்னதான உணவு பரிமாறி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் உள்ளூரை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய முடியாத அளவுக்கு பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். இது குறித்து கோவில் துணை ஆணையரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

எனவே ராமேசுவரம் கோவில் பிரகாரங்களில் பக்தர்கள் செல்ல முடியாத அளவுக்கு மூடப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை அகற்றுவதற்கும், உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தனி வழி ஏற்படுத்தவும், அன்னதானத்தில் பக்தர்களுக்கு உணவு பரிமாற தனியாக கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், மேலும், ராமேசுவரம் கோவில் துணை ஆணையரை இடமாற்றம் செய்யவும் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story