வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்கள் சேகரிப்பு தொடங்குமா?


வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்கள் சேகரிப்பு தொடங்குமா?
x

வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்கள் சேகரிப்பு தொடங்குமா?

திருப்பூர்

திருப்பூர்

பனியன் தொழில் நகரான திருப்பூரில் வெளிமாவட்ட மக்கள் மட்டுமில்லாமல் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் திருப்பூர் மாநகர பகுதிகளில் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர். சொந்த ஊர்களில் வேலையில்லாமல், பிழைப்பு தேடி திருப்பூரில் வேலைக்கு வருகிறார்கள். படிக்காதவர்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்கும் நகராக திருப்பூர் விளங்கி வருகிறது.

வெளிமாநில தொழிலாளர்களால் உரிய நேரத்தில் பின்னலாடை ஆர்டர்களை செய்து முடிப்பதால் தொழில் வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், வெளிமாநிலத்தை சேர்ந்த சிலரால் குற்ற சம்பவங்களும் மாநகரில் பெருகி வருகிறது. அவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு துப்பு துலக்குவதில் தோல்வியை சந்தித்து வருகிறார்கள்.

வடமாநில தொழிலாளர்கள்

குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து வருபவர்கள் சொந்த ஊரில் தடை செய்யப்பட்ட அமைப்பில் இருந்தார்களா? குற்ற சம்பவங்களை செய்து விட்டு திருப்பூரில் பதுங்கி உள்ளார்களா? என எதையும் அறிய முடியாதபடி இருக்கிறார்கள். கடந்த காலங்களில் திருப்பூர் மாநகரில் நகை அடகு கடையில் கொள்ளையடித்து தப்பி சொந்த ஊருக்கு சென்றவர்களை போலீசார் மிகுந்த சிரத்தை எடுத்து கைது செய்தார்கள். அதுபோல் வடமாநில பெண்ணை திருப்பூரில் கொலை செய்து விட்டு சூட்கேசில் வைத்து வீசி சென்ற கணவரை இதுவரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் கடந்த காலத்தில் பிரபல நகைக்கடையில் கொள்ளையடித்து தப்பிய வடமாநில கொள்ளையர்களை சொந்த மாநிலத்துக்கு சென்று திருப்பூர் போலீசார் துரத்தி பிடிக்க முயன்றபோது அவர்கள் வங்கதேசத்துக்கு தப்பினார்கள். அதாவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநில ஆசாமிகளை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்வதற்கு இத்தனை பிரச்சினைகளை போலீசார் சந்திக்க வேண்டியுள்ளது.

வங்கதேச நாட்டினர்

இதுஒருபுறம் இருந்தாலும் வங்கதேச நாட்டினர், திருப்பூருக்கு வந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் மேற்கு வங்க மாநில முகவரியில் இருப்பதைப்போல் போலியாக ஆதார் கார்டு தயாரித்து திருப்பூரில் பதுங்கி இருப்பது அதிகரித்து வருகிறது. போலீசாரின் ரோந்துப்பணியில் சந்தேகத்தின் பேரில் பிடிபடுபவர்கள் வங்க தேசத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதன்பிறகு கைது செய்து நாடுகடத்தி வருகிறார்கள். ஆனால் குடியிருப்புகளில், பனியன் நிறுவன விடுதிகளில் தங்கி பணியாற்றும் வங்கதேசத்தினரை சரியாக அடையாளம் காண்பதில் போலீசாருக்கு இன்னும் சிரமம் நீடிக்கிறது.

இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் திருப்பூர் வரும் வடமாநில தொழிலாளர்களின் ஆதார் மற்றும் சொந்த ஊர் முகவரி, கைரேகை உள்ளிட்ட முழு விவரங்களை சேகரித்து கணினியில் பதிவேற்றம் செய்யும் நடைமுறையை மாநகர காவல்துறை மேற்கொண்டது. போலீஸ் நிலையங்கள் வாரியாக கணக்கெடுப்பு பணியை நடத்தினார்கள். ஆனாலும் அந்த பணி இதுவரை முழுமை பெறாமல், சரியான திட்டமிடல் இல்லாமல் கிடப்பில் உள்ளது.

விவரங்கள் சேகரிப்பு

வடமாநிலங்களில் இருந்து ரெயில் மூலமாக திருப்பூரை நோக்கி தொழிலாளர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். இவர்களை அடையாளப்படுத்துவது என்பது முக்கியமான ஒன்றாகும். மாநகர காவல்துறை இனியும் தாமதிக்காமல் ஆதார் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து ஆவணப்படுத்த வேண்டும். ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் மையம் அமைத்து அங்கேயே வடமாநிலத்தவர்களின் விவரங்களை பதிவு செய்தால் எளிமையாக இருக்கும். அப்போது தான் எதிர்காலத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க பெரிதும் உதவியாக அமையும்.

வெளிநாட்டு ஆர்டர்கள் நம்மை நோக்கி வரும்வேளையில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள், வெளிமாநிலத்தவர்கள் தொழில் நிமித்தமாக திருப்பூர் வந்து செல்கிறார்கள். மாநகரில் குற்ற சம்பவங்கள் குறைந்து இருக்கும்போதே அவர்களுக்கு நம்பிக்கை பிறந்து திருப்பூரை நோக்கி அச்சமின்றி வருவார்கள். அதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுப்பது மாநகர காவல்துறையின் இன்றியமையாத பணியாக உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் ஒத்துழைப்பு கொடுத்து வடமாநில தொழிலாளர்களின் விவரங்களை பெற்று அடையாளப்படுத்துவதே சிறந்த தீர்வாக அமையும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

----


Next Story