சந்தைகளில் அதிக அளவு விற்பனைக்கு வரும் கிழங்கு வகைகள்


சந்தைகளில் அதிக அளவு விற்பனைக்கு வரும்   கிழங்கு வகைகள்
x

குமரி மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் கிழங்கு வகைகள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன. அவை கிேலா ரூ.50 முதல் விற்பனை செய்யப்படுகின்றன.

கன்னியாகுமரி

குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் கிழங்கு வகைகள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன. அவை கிேலா ரூ.50 முதல் விற்பனை செய்யப்படுகின்றன.

கிழங்கு வகைகள்

குமரி மாவட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காச்சில் கிழங்கு, சேனைக் கிழங்கு, வாழைச் சேம்பு, முட்டைச் சேம்பு, கூவைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகள் நடவு செய்யப்படுகிறது. இதில் மரவள்ளிக்கிழங்கு மட்டும் தனிப்பயிராகவும், இதர கிழங்குகள் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது.

இவற்றில் கூவைக் கிழங்கு பெரும்பாலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பங்குனி மாதம் கிழங்கு வகை பயிர்கள் நடவு செய்யப்பட்டால் கார்த்திகை மாதம் இவற்றை அறுவடை செய்யலாம்.

அறுவடை

இந்தநிலையில் மாவட்டத்தில் குலசேகரம், பேச்சிப்பாறை, திருவட்டார், அருமனை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு கிழங்கு வகைகள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன. இவை கிலோ ரூ.50 முதல் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுகுறித்து குலசேகரம் சந்தையில் கூவைக் கிழங்கு மற்றும் காய்ச்சில் கிழங்கு விற்பனை செய்யும் முத்தையன் கூறியதாவது:-

கார்த்திகை மாதம் கிழங்குகளில் அறுவடைக் காலமாகும். இதனால் சந்தைகளுக்கு இவை அதிக அளவில் கொண்டு வந்து விற்பனை செய்கிறோம். மேலும் பழங்குடி பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன. முன்காலங்களில் மக்கள் அதிக அளவில் உடலுழைப்பு செய்பவர்களாக இருந்தனர். இதனால் கிழங்கு வகைகளை அதிக அளவில் வாங்கி சாப்பிடும் பழக்கம் இருந்தது. தற்போது உணவு பழக்கங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிழங்கு வகைகளை சாப்பிடுவதும் குறைந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தின்பண்டங்கள் தயாரிக்க வேண்டும்

இதுகுறித்து முன்னோடி விவசாயி கொட்டூர் ஹென்றி கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் முன் காலங்களில் கிழங்கு வகைகள் மக்களின் பிரதான உணவாக இருந்தது. தற்போது உணவுப் பழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கிழங்கு வகைப் பயிர்களை சாப்பிடுவதும் படிப்படியாக குறைந்து வருகிறது. கிழங்கு வகைகளான கூவைக் கிழங்கு போன்றவற்றில் குழந்தைகளுக்கு தேவையான மாவுச் சத்து, நார்ச்சத்து போன்றவை உள்ளன. இது போன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வாழைச் சேம்பு, முட்டைச் சேம்பு போன்றவையும் அபூர்வமான கிழங்கு வகைகளாகும். இவற்றில் இருந்து சிப்ஸ் உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட தின்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு அதிக பலன்கள் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story