கடந்த ஜனவரி மாதத்தில் தென் மண்டலத்தில் 255 பேரிடம் நன்னடத்தை பிணையப்பத்திரம் -ஐ.ஜி. அஸ்ராகார்க் தகவல்


கடந்த ஜனவரி மாதத்தில் தென் மண்டலத்தில் 255 பேரிடம் நன்னடத்தை பிணையப்பத்திரம் -ஐ.ஜி. அஸ்ராகார்க் தகவல்
x

தென் மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 255 பேரிடம் நன்னடத்தை பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளது என்று ஐ.ஜி. அஸ்ராகார்க் கூறினார்

மதுரை


தென் மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 255 பேரிடம் நன்னடத்தை பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து, தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கஞ்சா விற்பனை

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தமிழக காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர், கைது செய்யப்படுவதுடன் அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது. தென்மண்டலத்தை பொறுத்தமட்டில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனைக்கு எதிராக போதுமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரப்படுகிறது.

கடந்த 2022-ம் ஆண்டில் 13 கஞ்சா வழக்குகளில் நிதி விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அந்த வழக்குகளின் குற்றவாளிகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் ரூ.12½ கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் அவற்றோடு அவர்களின் அசையா சொத்துக்களையும் முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிணையப்பத்திரம்

தென் மண்டலத்தில், 1091 கஞ்சா வழக்குகளில், குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் சந்தேகத்திற்குரிய 1956 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும் 1377 குற்றவாளிகள் மீது நன்னடத்தைக்கான பிணையபத்திரம் பெறப்பட்டுள்ளன. நன்னடத்தை பிணையப்பத்திர விதிமுறைகளை மீறிய 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 255 கஞ்சா குற்றவாளிகளிடம் நன்னடத்தைக்கான பிணையபத்திரம் பெறப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட நகர்வாக தற்போது கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளின் குற்ற போக்கை கட்டுப்படுத்தவும், தொடர்ந்து அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் அவர்கள் மீதான குற்றப்பதிவேடு பராமரிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடவடிக்கை

அதன்படி, மதுரை -85, விருதுநகர் -132, திண்டுக்கல் -131 தேனி -59, ராமநாதபுரம் -26, சிவகங்கை -26, நெல்லை மாவட்டம்-46, தென்காசி -15, தூத்துக்குடி -28, மற்றும் குமரி மாவட்டம்-59 மற்றும் நெல்லை மாநகரம்-17 என தென்மண்டலத்தில் மொத்தமாக 624 பேருக்கு குற்றப்பதிவேடு தொடங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நடவடிக்கை தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும். அதன் மூலம் கஞ்சாவுக்கு எதிரான அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story