பாரத எழுத்தறிவு திட்டம் தொடக்கம்
பாவனா நகர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பாரத எழுத்தறிவு திட்டம் தொடக்கப்பட்டது.
கூடலூர்,
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி பாவனா நகரில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குடியரசு தின விழாவையொட்டி பாரத எழுத்தறிவு திட்டம் தொடங்கப்பட்டது. இதுகுறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரஞ்சிதா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை பங்கஜாட்சி வரவேற்றார். தொடர்ந்து பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர் காஞ்சனா நோட்டு புத்தகங்களை வழங்கினார். திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி தலைமை ஆசிரியை விளக்கி பேசினார். மண்ணில் பிறந்த அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். முதுமை கல்விக்கு தடையில்லை. 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்கத் தெரியாதோர், பாரத எழுத்தறிவு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சார்பில், 50 நாற்காலிகள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் 3 மேஜைகள் மாணவர்கள் பயன்பெற பள்ளிக்கு வழங்கப்பட்டது.