தமிழகத்தில் முதல் முறையாக பழனிசெட்டிபட்டியில் தொடக்கம்:மூத்த குடிமக்களுக்கு இலவச ஆட்டோ பயண உதவி திட்டம்


தமிழகத்தில் முதல் முறையாக பழனிசெட்டிபட்டியில் தொடக்கம்:மூத்த குடிமக்களுக்கு இலவச ஆட்டோ பயண உதவி திட்டம்
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் முதல் முறையாக மூத்த குடிமக்களுக்கு இலவச ஆட்டோ பயண உதவி திட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் தொடங்கப்பட்டது.

தேனி

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில், மூத்த குடிமக்களுக்கு இலவச ஆட்டோ பயணம் செய்யும் திட்டம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று தொடங்கப்பட்டது. பேரூராட்சி பகுதியை சேர்ந்த 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், ரேஷன் கடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் தொடர்பாக அரசு அலுவலகங்கள் சென்று வருவதற்கு ஆட்டோக்களில் இலவசமாக அழைத்துச் சென்று, மீண்டும் அழைத்து வந்து வீடுகளில் சேர்க்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவுக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜாராம் தலைமை தாங்கி பேசினார். பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். இந்த திட்டத்தை உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரும், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவருமான அமாவாசை தொடங்கி வைத்தார். இதில், பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், கல்வியாளர் செல்வமனோகரன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். பயனாளிகளுக்கு இலவச பயணம் செய்வதற்கான அடையாள அட்டை மற்றும் பயண குறிப்பு புத்தகம் வழங்கப்பட்டது. முடிவில் பேரூராட்சி துணைத்தலைவர் மணிமாறன் நன்றி கூறினார். இதில் கவுன்சிலர்கள், ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த திட்டத்தின் செயல்பாடு குறித்து பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி கூறும்போது, 'தமிழகத்தில் முதல் முறையாக மூத்த குடிமக்களுக்கான இலவச ஆட்டோ பயண உதவி திட்டத்தை தொடங்கி உள்ளோம். இதற்காக 2 ஆட்டோ தொழிற்சங்கங்களை சேர்ந்த 65 ஆட்டோ டிரைவர்கள் ஆர்வத்துடன் தங்களின் பெயர்களை பதிவு செய்தனர். இதேபோல், இதுவரை முதியோர்கள் 70 பேர் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்' என்றார்.


Related Tags :
Next Story