தூத்துக்குடியில்சலவைத் தொழிலாளர்கள்உள்ளிருப்பு போராட்டம்
தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கட்கிழமை சலவைத் தொழிலாளர்கள்உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் சலவைத்துறையிலுள்ள வணிகவளாக கடைகளை தங்களின் அயனிங் கடைகளுக்கு ஒதுக்க வலியுறுத்தி நேற்று சலவைத் தொழிலாளர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சலவைத் தொழிலாளர்கள்
தூத்துக்குடியில் ஆறு, குளங்கள் இல்லாததால் 1957-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் காலத்தில் தூத்துக்குடி அண்ணா நகர் சலவைத் துறை கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த சலவைத்துறை பழுதடைந்து விட்தால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பகுதியில் துணி காய வைக்கும் இடத்தில் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. அதனால் துணி காய வைக்க இடையூறாக உள்ளது. ஆகையால் அந்த பூங்காவை அகற்ற வேண்டும். அண்ணாநகர் சலவை துறையில் உள்ள வணிகவளாக கடைகளை சலவை தொழிலாளர்களுக்கு அயனிங் கடை வைப்பதற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து மனு கொடுத்து வருகின்றனர்.
போராட்டம்
இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள், அண்ணாநகர் சலவைத்துறையில் அமைக்கப்பட்டு உள்ள பூங்காவை சுத்தம் செய்வதற்காக பணியாளர்களுடன் சென்றனர். அப்போது அங்கு திரண்டு வந்த சலவைத் தொழிலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட 25 சலவைத் தொழிலாளர்களை கைது செய்தனர். இதனை அறிந்த மற்ற சலவைத் தொழிலாளர்கள் சலவைத்துறையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அதன்பிறகு மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் கைது செய்த தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
கோரிக்கை மனு
மேலும் பா.ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் கட்சியினர் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீயிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி சலவைத்துறைக்கு காமராஜர் ஆட்சி காலத்தில் 9.45 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அந்த சலவைத்துறை சீரமைக்கப்பட்டு உள்ளது. இதில் துணியை உலர்த்தும் பகுதியில் பூங்கா அமைக்கப்பட்டு இருப்பதால், சலவைத் தொழிலாளர்கள் துணியை உலர்த்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அங்கு கட்டப்பட்டு உள்ள நீர்த்தேக்க தொட்டிகளும் தரமானதாக இல்லை. ஆகையால் மாநகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.