லாரி மோதி கவுன்சிலரின் கணவர் பலி
லாரி மோதி கவுன்சிலரின் கணவர் பலி
ஒரத்தநாட்டில் லாரி மோதி கவுன்சிலரின் கணவர் பரிதாபமாக இறந்தார்.
கவுன்சிலர் கணவர்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வடக்குத்தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது54). இவரது மனைவி உமாதேவி. இவர் ஒரத்தநாடு பேரூராட்சி 2-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.
நேற்றுமுன்தினம் தர்மராஜ் அவரது உறவினர் தென்னமநாட்டை சேர்ந்த குப்புசாமி (60) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு ஒரத்தநாட்டில் இருந்து தென்னமநாடு நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை தர்மராஜ் ஓட்டினார். குப்புசாமி பின்னால் அமர்ந்திருந்தார்.
லாரி ேமாதியது
இவர்கள் வல்லம் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் பின்னால் வந்த லாரி தர்மராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தர்மராஜ், குப்புசாமி ஆகிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தர்மராஜை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதில் படுகாயம் அடைந்த குப்புசாமி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உமாதேவி கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.