தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது


தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது
x
சேலம்

எடப்பாடி:-

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

சுற்றுப்பயணம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக நேற்று எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கட்சியினரின் வரவேற்பை ஏற்று கொண்டதுடன், பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றார்.

அவருக்கு எடப்பாடி நகர செயலாளர் முருகன் தலைமையில் மேளதாளங்கள் முழங்க, சீர்வரிசை பொருட்களுடன் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக கொங்கணாபுரம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் பகுதியில் அரசு கலைக்கல்லூரி, புதிய கூட்டுக்குடிநீர் திட்டம், கல்வியியல் கல்லூரி, சிட்கோ தொழிற்பேட்டை, கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் தி.மு.க. ஆட்சியில் கடந்த 24 மாதங்களாக எந்த ஒரு திட்டப்பணியும் எடப்பாடி தொகுதியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே செய்யப்படவில்லை.

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை தி.மு.க. அரசு மெத்தனமாக செயல்படுத்தி வருகிறது. தற்போது தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்ற செயல்கள் பெருகிவிட்டன. தூத்துக்குடி அருகே மணல் கடத்தல் குறித்து புகார் அளித்த கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதை காட்டுகிறது.

வருத்தம் அளிக்கிறது

மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை சட்டமன்ற கூட்டத்தொடரில் நான் சுட்டிக்காட்டினேன். போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

தி.மு.க. அமைச்சர் ஒருவரே, அரசுக்கு நெருக்கமான 2 பேர் ரூ.30 ஆயிரம் கோடியை வைத்து கொண்டு என்ன செய்வது? என்று தெரியாமல் உள்ளதாக கூறிய ஆடியோ வெளியானது அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரியும். இதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஒன்றிய குழு தலைவர் கரட்டூர் மணி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் கதிரேசன், லலிதா, கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் மாதேஸ்வரன், ராஜேந்திரன், மாதேஷ், கோரணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் மற்றும் ரவி உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story