'ஆன்லைன்' சூதாட்டத்துக்கு எதிராக சட்டம் பிறப்பிக்க குழு: அரசு அறிவிப்புக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
‘ஆன்லைன்’ சூதாட்டத்தை தடை செய்வதற்கு அவசர சட்டம் பிறப்பிக்க குழு அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் 'ஆன்லைன்' சூதாட்டத்தை தடை செய்வதற்கு தமிழக அரசு அவசர சட்டத்தை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே பா.ம.க. சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசியதாவது:-
மது, போதை பழக்கம், 'ஆன்லைன்' சூதாட்டம் ஆகியவை தமிழகத்தை சீரழிக்கிறது. மதுவுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் 43 ஆண்டுகளாக போராடி வருகிறார். போதைப் பொருட்களுக்கு எதிராக 15 ஆண்டுகளாகவும், 'ஆன்லைன்' சூதாட்டத்துக்கு எதிராக 7 ஆண்டுகளாகவும் பா.ம.க. போராடி வருகிறது.
'ஆன்லைன்' சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்தியாவிலேயே அதிக அறிக்கைகள், 'டுவிட்டர்' பதிவுகள் வெளியிட்ட ஒரே கட்சி பா.ம.க. தான். மக்கள் நலனில் அக்கறை உள்ள ஒரே கட்சியும் பா.ம.க.தான்.
தமிழகத்தில் 'ஆன்லைன்' சூதாட்டத்தால் கடந்த ஆகஸ்டு 3-ந்தேதி முதல் தற்போது வரை 23 பேர் தற்கொலை செய்துகொண்டு உள்ளனர். ஏழை, நடுத்தர மக்கள், பணக்காரர் என்று அனைத்து தரப்பினரும் 'ஆன்லைன்' சூதாட்டத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
பா.ம.க. வரவேற்கிறது
1867-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட சட்டத்தில் இது திறன் சார்ந்த விளையாட்டு என்று கூறப்பட்டுள்ளது. இது மனிதனோடு, மனிதன் விளையாடும் விளையாட்டு அல்ல, 'ரோபோ' விளையாடும் விளையாட்டு என்பதால் இது திறன் சார்ந்தது அல்ல. அதிர்ஷ்டம் சார்ந்தது என்பதை வலியுறுத்தி தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும்.
நான் இந்த ஆர்ப்பாட்ட மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, 'தமிழக அரசு 'ஆன்லைன்' ரம்மி விளையாட்டுக்கு எதிராக அவசர சட்டம் நிறைவேற்றுவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழுவை அமைத்துள்ளது. இதை பா.ம.க. வரவேற்கிறது.
இந்த சட்டத்தை நிறைவேற்ற 2 வார கால அவகாசம் தேவையில்லை. 2 நாட்கள் போதுமானது. எனவே இந்த அவசர சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். பா.ம.க. தான் ஆக்கப்பூர்வமான, உண்மையான எதிர்க்கட்சியாக இருக்கிறது. மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் எங்களுடைய பயணம் இருக்கும். தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வதற்கு டாக்டர் ராமதாஸ் வழிகாட்டியாக இருக்கிறார். தீயப்பழக்கங்கள், சாபக்கேடுகளை ஒழிப்போம் என்று தமிழக மக்களை அழைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொண்டர்கள் மகிழ்ச்சி
'ஆன்லைன்' சூதாட்டத்துக்கு எதிராக பா.ம.க. ஆர்ப்பாட்டம் நேற்று தொடங்கும் வேளையில், 'ஆன்லைன்' சூதாட்டத்துக்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியானதால் பா.ம.க.வினர் உற்சாகம் அடைந்தனர். இது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி, டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.