வக்கீல் திடீர் உண்ணாவிரத போராட்டம்
கலெக்டர் அலுவலகம் முன்பு வக்கீல் திடீர் உண்ணாவிரத போராட்டம்
நாகர்கோவில்,
நாகர்கோவில் புத்தேரி பாறையடி பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ் (வயது 46), வக்கீல். இவர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயில் அருகே நேற்று திடீரென கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அமர்ந்து, சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். புத்தேரி வருவாய் கிராமத்தில் உள்ள ஒரு சர்வே எண்ணில் உள்ள சொத்துக்கள் ஒரு பெண்ணின் பெயரிலும், பட்டா மட்டும் வேறொருவர் பெயரிலும் உள்ளது. போலி ஆவணம் தயாரித்து மாற்றம் செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், போலி ஆவணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டார். இதேகோரிக்கைகள்தான் பதாகைகளில் எழுதப்பட்டு இருந்தது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் வக்கீல் சாம்ராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவரிடம், போலி ஆவணங்கள் மூலம் சொத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தால், அந்த ஆவணத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து வக்கீல் சாம்ராஜ் தனது போராட்டத்தை கைவிட்டு, கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் மனு கொடுத்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.