சாலையில் தவறவிட்ட ரூ.50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த வக்கீல்
சாலையில் தவறவிட்ட ரூ.50 ஆயிரத்தை வக்கீல் போலீசில் ஒப்படைத்த ார்.
திருச்சி தில்லைநகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். வக்கீலான இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து கோர்ட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். தில்லைநகர் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது, இவருக்கு முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் இருந்து 500 ரூபாய்கள் கொண்ட நோட்டுக்கட்டு ஒன்று கீழே விழுந்தது. இதை பார்த்த ரஞ்சித்குமார், கீழே விழுந்த நோட்டு கட்டை எடுத்து கொண்டு, பணம் தவறிவிட்டு சென்ற வாலிபரின் மோட்டார் சைக்கிளை பின்நோக்கி துரத்தி சென்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக போக்குவரத்து நெரிசலில் அவர் சிக்கி கொண்டதால் பணத்தை தவறவிட்டவரை பிடிக்க முடியவில்லை. பின்னர் அவர், தனது நண்பர்களுடன் அந்த பணத்தை தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த நோட்டு கட்டுகளை எண்ணிபார்த்தபோது, அதில் ரூ.50 ஆயிரம் இருந்தது. இது தொடர்பான தகவல்களை சமூகவலைதளங்களிலும் பதிவிட்டார். இது குறித்து தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தி பணத்தை தவறவிட்டவரை தேடி வருகிறார்கள். சாலையில் தவறவிட்ட பணத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த வக்கீலை அங்கிருந்த போலீசார் பாராட்டினர்.