அஞ்சல் அலுவலகம், சாலை வசதி கேட்டு வக்கீல்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
அஞ்சல் அலுவலகம், சாலை வசதி கேட்டு வக்கீல்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி கோர்ட்டு வளாகத்தில் உள்ள திருச்சி பார் அசோஷியேசன் கூட்டம் நேற்று முன்தினம் சங்க தலைவர் சவுந்திரராஜன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் மதியழகன், பொருளாளர் சுரேஷ்பாபு, குற்றவியல் வக்கீல் சங்க தலைவர் பி.சுரேஷ், செயலாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருச்சி வக்கீல்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோர்ட்டு வளாகத்தில் தபால் நிலைய வசதி, கோர்ட்டு வளாகத்தில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். திருச்சி கூடுதல் மகிளா நீதிபதி நடவடிக்கைகள் குறித்து உடனடியாக துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள திருச்சியில் உள்ள அனைத்து நீதிமன்ற பணிகளில் இருந்தும் வக்கீல்கள் அனைவரும் விலகி இருக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, நேற்று திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாவட்ட கோர்ட்டு, துறையூர், மணப்பாறை, முசிறி, லால்குடியில் உள்ள கோர்ட்டுகளில் சுமார் 3 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வழக்குகளில் வக்கீல்கள் யாரும் ஆஜர் ஆகாததால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன.