'மகாத்மா காந்தி வாழ்க்கையில் ஏராளமான விஷயங்களை வக்கீல்கள் கற்றுக்கொள்ளலாம்'-ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி மகாதேவன் பேச்சு
மகாத்மா காந்தி வாழ்க்கையில் வக்கீல்கள் ஏராளமான விஷயங்களை கற்றுக்கொள்ளலாம் என்று மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி மகாதேவன் பேசினார்.
மகாத்மா காந்தி வாழ்க்கையில் வக்கீல்கள் ஏராளமான விஷயங்களை கற்றுக்கொள்ளலாம் என்று மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி மகாதேவன் பேசினார்.
கண்காட்சி
மதுரை ஐகோர்ட்டு மற்றும் காந்தி மியூசியம் ஆகியவை இணைந்து காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை ஐகோர்ட்டில் "வழக்கறிஞர் காந்தி" என்ற சிறப்பு கண்காட்சி நேற்று தொடங்கியது இந்த கண்காட்சியை மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி மகாதேவன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மகாத்மா காந்தியடிகள் குறித்து லூயிபிஷர் எழுதிய "நான் கண்ட காந்தி" என்னும் புத்தகத்திற்கு முன்னுரை எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மகாத்மா காந்தியடிகளின் எளிய வாழ்க்கை, ஆசிரம சூழல், மக்கள் தொடர்பு ஆகியவற்றைப் பார்த்து லூயிபிஷர் இப்படிப்பட்ட மகாத்மா இந்த உலகில் இனி வர முடியாது என்றார்.
வக்கீல்கள் கற்றுக்கொள்ளலாம்
1921-ம் ஆண்டு செப்டம்பர் 22-ல் காந்தியடிகள் நடத்திய ஆடைப் புரட்சியின் நூற்றாண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. ஆடைப்புரட்சி நடைபெற்ற மதுரையில் வழக்கறிஞர் காந்தி கண்காட்சி நடைபெறுவது மிகப் பொருத்தமாகும். நீதித்துறையில் நல்ல முன்னுதாரணங்களை ஏற்படுத்தியவர் மகாத்மா காந்தி. உண்மையான வழக்குகளை மட்டுமே ஏற்றுக் கொண்டார். அவரது வாழ்க்கையில் வக்கீல்கள் கற்றுக் கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. அவரது வாழ்க்கை, கொள்கைகளை கற்றுக் கொள்வதற்கு இது போன்ற கண்காட்சி உதவும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில், நீதிபதிகள் பவானி சுப்பராயன், புகழேந்தி, தாரணி, ஸ்ரீமதி, விஜயகுமார் உள்ளிட்ட நீதிபதிகளும், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், மதுரை ஐகோர்ட்டு அரசு பிளீடர் திலக்குமார் உள்ளிட்ட அரசு வக்கீல்கள், பிற வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, காந்தி மியூசிய பொருளாளர் வக்கீல் செந்தில்குமார் வரவேற்றார். செயலாளர் நந்தாராவ் நன்றி கூறினார். கல்வி அலுவலர் நடராஜன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த கண்காட்சி வருகிற 3-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.