திண்டுக்கல், வேடசந்தூரில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்
திண்டுக்கல், வேடசந்தூரில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல், வேடசந்தூரில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோர்ட்டு புறக்கணிப்பு
வேடசந்தூர் கோர்ட்டில் பணியாற்றும் வக்கீல்கள் அனைவரும் நேற்று ஒருநாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோர்ட்டுக்கு வரும் வழக்காடிகளுக்கும், வக்கீல்களுக்கும், விசாரணை கைதிகளுக்கும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து கொடுக்க வேண்டும். வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி வழங்க வேண்டும். கோர்ட்டு வளாகத்தில் கருவேல மரங்கள், முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. எனவே அவற்றை வெட்டி அகற்ற வேண்டும். கோர்ட்டில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு வக்கீல்கள் சங்க தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். இதில், வக்கீல்கள் கிருஷ்ணன், தங்கவேல்முனியப்பன், சரவணக்குமார், சுகுமார், சீனிவாசப்பெருமாள், நாகராஜ், காமராஜ், அரபுஅலி, பகத்சிங், அபிமன்யூ மற்றும் பலர் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
விசாரணை பாதிப்பு
இதேபோல் திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டில் பணியாளர்கள் பற்றாக்குறையை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தி திண்டுக்கல் வக்கீல்கள் சங்கத்தினர் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நேற்று வழக்கு விசாரணையின் போது வக்கீல்கள் ஆஜராகவில்லை. இதனால் முக்கிய வழக்குகளின் விசாரணை பாதிக்கப்பட்டது.