வக்கீல்கள் சட்ட நுணுக்கங்களை தொடர்ந்து படித்து கொண்டே இருக்க வேண்டும்


வக்கீல்கள் சட்ட நுணுக்கங்களை தொடர்ந்து படித்து கொண்டே இருக்க வேண்டும்
x

வக்கீல்கள் சட்ட நுணுக்கங்களை தொடர்ந்து படித்து கொண்டே இருக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா பேசினார்.

திருவண்ணாமலை

போளூர்

வக்கீல்கள் சட்ட நுணுக்கங்களை தொடர்ந்து படித்து கொண்டே இருக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா பேசினார்.

சார்பு நீதிமன்றம் திறப்பு

போளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக சார்பு நீதிமன்றம் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. கூடுதல் மாவட்ட நீதிபதி இருசன் பூங்குழலி வரவேற்றார்.

மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா தலைமை தாங்கி சார்பு நீதிமன்றத்தை திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஐகோர்ட்டு உத்தரவின்படி தாலுகாக்களில் நீதிமன்றங்கள் இருக்க வேண்டும். இதனால் பொதுமக்களுக்கு உடனடியாக நீதி கிடைக்கிறது. வக்கீல்களுக்கும் வேலை கிடைக்கிறது. வக்கீல்கள் தொழில் புனிதமானது.

உள்ளூரில் பணியாற்றுவதை விட வெளியூரில் பணியாற்ற வேண்டும். அப்போதுதான் நிறைய அனுபவங்கள் கிடைக்கும்.

மக்கள்தொகை விகிதாசாரப்படி நீதிபதிகள் எண்ணிக்கையும் உயர்கிறது. இதனால் உடனடியாக மக்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.

மரியாதை அதிகம்

வக்கீல்கள் வழக்குகளுடன் தான் போராட வேண்டுமே தவிர, நீதிமன்றத்துடன் அல்ல. மற்ற தொழிலை விட வழக்கறிஞர் தொழிலில் மரியாதை அதிகம். புரிகிற மாதிரி வாழ்க்கை நடத்தினால் போதுமானது. அதில் வெற்றி பெறலாம்.

மற்ற தொழில்களான டாக்டர், என்ஜினீயர் போன்றவற்றில் வயதாக வயதாக மதிப்பு கூடும். ஆனால் வக்கீல்கள் சட்ட நுணுக்கங்களை தொடர்ந்து படிப்பதாலேயே அவர்களுக்கு சமுதாயத்தில் மரியாதை கூடுகிறது.

வழக்குகளில் ஜூனியர் வக்கீல்கள் திறம்பட நடத்தி அதில் வெற்றி பெற்றால், மூத்த வக்கீல்களால் பாராட்டுப்படுவது இந்த தொழிலில் மட்டும் தான் நடக்கிறது. புதுப்புது சட்ட நுணுக்கங்களை நன்கு தெரிந்து கொண்டால் தொழிலில் பிரகாசிக்க முடியும்.

டாக்டர், என்ஜினீயர் தொழிலில் பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கும். ஆனால் வக்கீல் தொழிலில் பணம் தரவில்லையென்றாலும் விறுப்பு, வெறுப்பு இன்றி வழக்கை நடத்தி நீதி கிடைக்க செய்வது மட்டும்தான் நோக்கமாக இருக்கும்.

படித்து கொண்டே இருக்க வேண்டும்

புதுப்புது சட்டங்கள் வந்து கொண்டே இருக்கிறது. திறம்பட கையாள சட்ட நுணுக்கங்களை தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி பேசுகையில், வந்தவாசி அருகே மும்முனி கிராமத்தில் சார்பு நீதிமன்றம் விரைவில் அமைய உள்ளதாக தெரிவித்தார்

இதில் போளூர் வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜேந்திரன், திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் துணை சூப்பிரண்டு ஸ்டீபன், வழக்கறிஞர் சங்க செயலாளர் பாலமூர்த்தி, கலசபாக்கம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் போளூர், திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, ஆரணி, செய்யாறு பகுதிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் தலைமை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.


Next Story