தலைவர்கள் பிரசாரம்:நெரிசலில் சிக்கிய ஈரோடு சாலைகள்பொதுமக்கள் கடும் அவதி


தலைவர்கள் பிரசாரம்:நெரிசலில் சிக்கிய ஈரோடு சாலைகள்பொதுமக்கள் கடும் அவதி
x

பொதுமக்கள் கடும் அவதி

ஈரோடு

ஈரோட்டில் தலைவர்கள் பிரசாரம் காரணமாக சாலைகள் நெரிசலில் சிக்கியதால் பொதுமக்கள் கடும் அவதிபட்டனர்.

தலைவர்கள் பிரசாரம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் காரணமாக தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, தே.மு.தி.க., நாம்தமிழர் கட்சிகளின் தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டு உள்ளனர். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் மக்களை சந்தித்து தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இதனால் அந்தந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. உள்ளிட்டவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

நெருக்கடி

கிழக்கு சட்டமன்ற தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரத்துக்காக தலைவர்கள் சென்று வருகிறார்கள். அவர்களுடன் அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் என்று பலரும் செல்கிறார்கள். அவ்வாறு செல்லும் போது அனைத்து சாலைகளும் நெருக்கடிக்கு ஆளாகின்றன.

நேற்று தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. சம்பத்நகர் முதல் சூரம்பட்டி நால்ரோடு வரை பிரசாரம் செய்தார். அவர் செல்லும் வழி நெடுகிலும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபோல் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலையில் கனிராவுத்தர் குளம் பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார்.

பொதுமக்கள் அவதி

மிகவும் பரபரப்பான இந்த ரோட்டில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சத்தி ரோட்டில் சுமார் ஒருகிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அ.தி.மு.க. பிரசாரத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களை ஏற்றி வந்த வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டதால் வேறு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து சென்ற மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

இதுபோல் பவானி ரோட்டில் கனிமொழி எம்.பி.யும், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஒரே இடத்தில் அடுத்தடுத்து பிரசாரத்துக்கு நேரம் ஒதுக்கி உள்ளனர். இதனால் பவானி ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிக்கல் மேடு பகுதியில் கனிமொழி எம்.பி. பேசிக்கொண்டு இருக்கும்போது, முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பி.பி.அக்ரகாரம் வண்டி பேட்டை பகுதிக்கு வந்தார்.

திணறல்

2 பகுதிக்கும் 1½ கிலோ மீட்டர் தூரம் மட்டுமே உள்ள நிலையில் 2 கூட்டணிகளுக்கும் ஆதரவான மக்கள் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தனர். கனிமொழி எம்.பி. பேசிவிட்டு புறப்பட்டு சென்ற நிலையில், அங்கு பொதுமக்கள் கலைந்து செல்லும் முன்பே, முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நெரிக்கல் மேடு பகுதிக்கு புறப்பட்டார். ஆனால், பவானி ரோட்டில் ஏற்பட்ட திடீர் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் எங்கும் செல்ல முடியாமல் திணறின.

ஆம்புலன்சு வாகனங்கள் கூட செல்ல வசதி இல்லாத நிலை ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி வந்த வேன் முன்னேறி வர முடியாத அளவுக்கு வாகனங்கள் நின்றன. அ.தி.மு.க.வினர், தி.மு.க.வினர் என்று கட்சி நிர்வாகிகள் வந்த வாகனங்கள், வேலை முடிந்து வீடுகளுக்கு செல்லும் பொதுமக்களின் வாகனங்கள், பிரசார கூட்டத்துக்கு வந்து திரும்பும் வாகனங்கள் என்று சின்ன சின்ன சந்துகளில் கூட வாகனங்கள் நெருக்கியடித்துக்கொண்டு நின்றன. போதிய அளவு போலீசார் இல்லாததால் போலீசாரும் போக்குவரத்தை சீரமைக்க முடியாமல் திணறினார்கள்.

முன்னாள் அமைச்சர்கள்

எடப்பாடி பழனிசாமியின் வாகனம் முன்னேற முடியாமல் சிக்கிக்கொண்டதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் எஸ்.சேகர் ஆகியோர் வாகனத்தில் இருந்து இறங்கி முன்னால் நடந்து சென்று வாகனங்கள் முறையாக செல்ல கடும் முயற்சி செய்தனர். இதற்கிடையே போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து நீண்ட போராட்டத்துக்கு பின்னர் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தினர்.

இதுகுறித்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, 'குறித்த நேரத்துக்கு சென்று நான் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வதை தடுக்க தி.மு.க. அரசு திட்டமிட்டு குளறுபடி ஏற்படுத்துவதாக' குற்றம்சாட்டினார். இதுபற்றி ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, 'தி.மு.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்த, அ.தி.மு.க. ஆதரவு அதிகாரிகள் இதுபோன்று பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள். இதை முதல்-அமைச்சர் கவனத்தில் எடுத்து, பொதுமக்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தாத வகையில் போக்குவரத்து இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


Next Story