கூடலூரில் வாகன விபத்துகளுக்கு வழிவகுக்கும் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு


கூடலூரில் வாகன விபத்துகளுக்கு வழிவகுக்கும் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் வாகன விபத்துக்கு வழிவகுக்கும் குண்டும், குழியுமாக கிடக்கும் சாலையால் மக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் வாகன விபத்துக்கு வழிவகுக்கும் குண்டும், குழியுமாக கிடக்கும் சாலையால் மக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.

குண்டும் குழியுமான சாலை

கூடலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் இருந்து ஐந்து முனை சந்திப்பு, வன துர்க்கை அம்மன் கோவில் வழியாக கோத்தர் வயல் வழியாக சாலை செல்கிறது.

இப்பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருவதால் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகிறது.

இதுதவிர ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படும் சமயத்தில் சிறிய ரக வாகனங்களை நடு கூடலூர்- கோத்தர் வயல் வழியாக இதே சாலையில் போக்குவரத்து திருப்பி விடப்படுகிறது. இந்த நிலையில் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக வாகனங்களை இயக்குவதிலும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது.

சீரமைக்கப்படுமா?

இதேபோல் பொதுமக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் மிகவும் பழுதடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. மேலும் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ- மாணவிகளும் பழுதடைந்த சாலையில் மிகுந்த மன உளைச்சலுடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை சீரமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

கூடலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் இருந்து கோத்தர்வயல் வரை சாலை பல இடங்களில் பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. இதனால் கர்ப்பிணிகள், நோயாளிகள், முதியோர் வாகனங்களில் பயணம் செய்ய முடியவில்லை. எனவே பல்வேறு தரப்பினரின் சிரமத்தை கருத்தில் கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story