தொழில் முதலீட்டாளர்களுக்கு 99 ஆண்டுகள் குத்தகை நிலம்; சிப்காட் நிர்வாக இயக்குனர் தகவல்


தொழில் முதலீட்டாளர்களுக்கு 99 ஆண்டுகள் குத்தகை நிலம்; சிப்காட் நிர்வாக இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 30 Aug 2023 3:00 AM IST (Updated: 30 Aug 2023 3:01 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே உப்பார்பட்டியில் அமையவுள்ள உணவு பூங்காவில் முதலீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் 99 ஆண்டுகளுக்கு குத்தகை நிலம் வழங்கப்படும் என்று சிப்காட் நிர்வாக இயக்குனர் ஆகாஷ் தெரிவித்தார்.

தேனி

தேனி அருகே உப்பார்பட்டியில் அமையவுள்ள உணவு பூங்காவில் முதலீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் 99 ஆண்டுகளுக்கு குத்தகை நிலம் வழங்கப்படும் என்று சிப்காட் நிர்வாக இயக்குனர் ஆகாஷ் தெரிவித்தார்.

முதலீட்டாளர்கள் கூட்டம்

தேனி மாவட்ட தொழில் மையம் மற்றும் சிப்காட் சார்பில், தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான உணவு தொழில் சார்ந்த முதலீட்டாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். சிப்காட் நிர்வாக இயக்குனர் ஆகாஷ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் ஷஜீவனா பேசும்போது, "தேனி அருகே உப்பார்பட்டி, பூமலைக்குண்டு, தப்புக்குண்டு ஆகிய கிராமங்களை உள்ளடக்கி 424.10 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. அதில், உணவு பூங்காவுக்காக 123.49 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிப்படை தேவைகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. பொதுவான தொழிற்சாலைகள் அமைக்க 300.61 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. உணவுப் பூங்கா அமைக்கப்படவுள்ள நிலங்கள் அனைத்தும் குத்தகை அடிப்படையில் 99 ஆண்டுக்கு சிப்காட் மூலம் பதிவு செய்து வழங்கப்படும்" என்றார்.

99 ஆண்டுகள் குத்தகை

கூட்டத்தில் சிப்காட் நிர்வாக இயக்குனர் ஆகாஷ் பேசியதாவது:-

தேனி சிப்காட் உணவு பூங்காவில் உணவு சார்ந்த தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு 123.49 ஏக்கர் பரப்பளவில் 55 பிளாட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் ரூ.46 லட்சம் என்ற விலையில், 50 சதவீதம் மானியத்துடன் 99 ஆண்டுகளுக்கு குத்தகையாக விடப்படும். அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதோடு, உணவு சார்ந்த பொருட்களை இருப்பு வைப்பதற்கு 6,011 சதுரமீட்டர் பரப்பளவில் குடோன், 6,011 சதுரமீட்டர் பரப்பளவில் குளிர்சாதன கிடங்கு, 5,475 சதுரமீட்டர் பரப்பளவில் பழங்களை பழுக்க வைக்கும் கூடங்கள் அமைக்கப்படுகிறது.

மேலும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்கின்ற பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய உழவர் சந்தை 500 சதுரமீட்டர் பரப்பிலும், சிறு மற்றும் குறு தொழில் அதிபர்கள் தொழில் செய்வதற்கு 282 சதுரமீட்டர் பரப்பளவில் தொழிற் கூடங்கள் அமைக்கப்படவுள்ளது. மேலும் பிற பொதுவான தொழிற்சாலைகள் அமைப்பதற்கு சிப்காட் பகுதியில் 95 பிளாட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.49 லட்சம். அதில் 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை தொழில் முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டது. இதில், சிப்காட் பொது மேலாளர் ஷீலா, முதன்மை செயல் அலுவலர் அழகுசுந்தரம், திட்ட அலுவலர் ஜெயராஜ் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story