காய்கறி பழங்களுக்கான பதப்படுத்தும் நிலையங்கள் குத்தகை- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
காய்கறி பழங்களுக்கான பதப்படுத்தும் நிலையங்கள் குத்தகை எடுக்க விரும்புபவர்கள் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் காய்கறி மற்றும் பழ வகைகள் சுமார் 20 ஆயிரம் எக்டருக்கு மேலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. காய்கறிகள் மற்றும் பழ வகைகள் உற்பத்தி அதிகமாக இங்கு இருப்பதால் அனைத்து காய்கறி பழ வகைகளை தரம் பிரித்து சுத்தம் செய்து லாபகரமாக சந்தைப்படுத்த சாத்தியக்கூறுகள் ஏராளமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலமாக சுமார் 8 கோடி ரூபாய் செலவில் திருவள்ளூர் மற்றும் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரணி கிராமம் ஆகிய இரண்டு இடங்களில் தரம் பிரிக்கும் கூடம் மற்றும் குளிர்பாதன கிடங்குடன் கூடிய பதப்படுத்தும் நிலையங்கள் இதர வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இவற்றினை அரசு நிர்ணயிக்கும் விலைக்கு குத்தகை முறையில் விட உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த முதன்மை பதப்படுத்தும் நிலையங்களை குத்தகைக்கு எடுக்க விரும்புபவர்கள் வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) திருவள்ளூர் அவர்களின் நேரில் அணுகியோ அல்லது 7708541376, 954396957. ddab.tiruvallur@gmail.com மூலம் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.