அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் எல்.இ.டி. திரையுடன் கூடிய போக்குவரத்து சிக்னல் திறப்பு


அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் எல்.இ.டி. திரையுடன் கூடிய போக்குவரத்து சிக்னல் திறப்பு
x

அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் எல்.இ.டி. திரையுடன் கூடிய போக்குவரத்து சிக்னல் திறக்கப்பட்டது.

சேலம்

சேலம் மாநகரில் முக்கிய இடங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் சாலை போக்குவரத்தை சீர்படுத்த புதிதாக எல்.இ.டி. திரையுடன் கூடிய சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய சிக்னலை மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா நேற்று பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அப்போது, போலீஸ் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா மற்றும் போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனர் உதயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் உள்ள 4 கம்பங்களிலும் பெரிய அளவிலான சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகளில் விழும் சிக்னலை 500 முதல் 800 மீட்டர் தொலைவில் இருந்து பார்த்தாலும் மிகவும் தெளிவாக தெரியும். அதேபோல், முன்பகுதியில் பெரிய அளவிலான கனரக வாகனங்கள் நின்றால், பின்னால் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு சிக்னல் தெரியும் வகையில் கம்பத்தில் எல்.இ.டி. திரை பொருத்தப்பட்டுள்ளது.

அந்த திரையில் என்ன சிக்னல் விழுகிறதோ? அந்த விளக்கு தெரியும். இதனால் பின்னால் நிற்கும் வாகனங்கள் எரிபொருளை மிச்சப்படுத்திகொள்ளலாம். இதுபோன்ற நவீன சிக்னல்களை மாநகரில் பல இடங்களில் தனியார் பங்களிப்புடன் அமைக்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். அடுத்தகட்டமாக இந்த சிக்னல் திரையில் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


Next Story