சட்டமன்ற மனுக்கள் குழுவினர் வளர்ச்சி பணிகளை ஆய்வு


சட்டமன்ற மனுக்கள் குழுவினர் வளர்ச்சி பணிகளை ஆய்வு
x
தினத்தந்தி 2 Sept 2023 2:00 AM IST (Updated: 2 Sept 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை சட்டமன்ற மனுக்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல்

சட்டமன்ற மனுக்கள் குழு

தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழுவினர், தலைவர் கோவி.செழியன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று திண்டுக்கல் மாவட்டத்துக்கு வருகை புரிந்தனர். இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைகளை கலெக்டர் பூங்கொடி முன்னிலையில் குழுவினர் ஆய்வு செய்ய தொடங்கினர்.

அதன்படி பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டனர். அப்போது கிரிவல பாதை சீரமைப்பு பணி, சுகாதார வளாகம், குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் போதுமான அளவு இருக்கிறதா? என்று ஆய்வு செய்தனர். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலுக்கு செல்லும் சாலை, ரதவீதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வு கூட்டம்

பின்னர் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் பாசன குளத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றி, தூர்வாரும் பணி, சீலப்பாடியில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம், திண்டுக்கல் மாநகராட்சி ஆர்.எம்.காலனியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் கூடம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திலும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின் போது சட்டமன்ற மனுக்கள் குழு தலைவர் கோவி. செழியன், கலெக்டர் பூங்கொடி மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வளர்ச்சி பணிகள், மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தயாரித்து சட்டமன்றத்தில் வைக்கப்படும். இதன்மூலம் அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைவது உறுதி செய்யப்படும் என்று குழு தலைவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் குழு உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.க்களுமான அய்யப்பன், கந்தசாமி, கார்த்திகேயன், நல்லதம்பி, பாபு, பொன்னுசாமி, முத்துராஜா, ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், துணை தலைவர் பொன்ராஜ், சட்டமன்ற செயலாளர் சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் சேக்முகையதீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story