சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு
சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
புதுக்கோட்டையில் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் விடுதிகள், தாசில்தார் அலுவலகம், கோர்ட்டில் வக்கீல்கள் சங்க கட்டிடம் உள்ளிட்ட இடங்களை சட்டமன்ற பொது கணக்கு குழுவின் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். விடுதி தொடர்பாக மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். மேலும் விடுதி முறையாக பராமரிக்கப்படாமல் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததை கண்டு அதனை கவனித்து வரும் துறையினரை கண்டித்தனர். அதன்பின் ஒரு ஓட்டலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கலெக்டர் கவிதாராமு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். குழுவிடம் பொதுமக்கள் தரப்பிலும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. அரசு கல்லூரி மாணவர் விடுதியில் ஆதிதிராவிட மாணவர்கள் தங்குமிடம், சமையல் கூடம் யாரும் வசிக்க முடியாத அளவில் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையில் இருந்ததை சரி செய்யவும், மாணவிகள் விடுதியில் கொசுவலை பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தெரிவித்தார். மேலும் புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் கட்ட அவர்கள் தரப்பில் இருந்து கேட்கப்பட்ட இடத்தில் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.