திண்டுக்கல்லில் எலுமிச்சை விலை உயர்வு


திண்டுக்கல்லில் எலுமிச்சை விலை உயர்வு
x

திண்டுக்கல்லில் வரத்து குறைவால் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது.

திண்டுக்கல்

'குட்டி கொடைக்கானல்' என்றழைக்கப்படும் சிறுமலையில் எலுமிச்சை, மிளகாய், காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக எலுமிச்சை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு சாகுபடி செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் திண்டுக்கல் சிறுமலை செட் பகுதியில் செயல்படும் சந்தைக்கு கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

இந்த சந்தை வாரத்தில் புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டுமே நடைபெறும். எலுமிச்சை பழங்களின் தரம் மற்றும் வரத்தை பொறுத்து அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படும். அந்த வகையில் சந்தைக்கு வழக்கமாக 10 டன் முதல் 15 டன் வரை எலுமிச்சை பழங்கள் வரத்தாகும். கடந்த மாதம் வரை 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை எலுமிச்சை பழங்களுக்கு ரூ.400 முதல் ரூ.2 ஆயிரம் வரை விலை கொடுத்து மொத்த வியாபாரிகள் வாங்கிச்சென்றனர்.

இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம், காலநிலை மாற்றம் ஆகியவையின் காரணமாக சிறுமலையில் எலுமிச்சை விளைச்சல் குறைந்தது. இதனால் நேற்று நடந்த சந்தைக்கு 8 டன் வரையே எலுமிச்சை பழங்கள் வரத்தானது. வரத்து குறைந்ததால் அவற்றின் விலையும் உயர்ந்தது. ஒரு மூட்டை எலுமிச்சை பழங்கள் ரூ.800 முதல் ரூ.3 ஆயிரம் வரை நேற்று விலை போனது. இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்ட போது, வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. ஆனாலும் சாகுபடி செலவை ஒப்பிட்டால் தற்போது கிடைத்த விலை கட்டுப்படியாகவில்லை என்றனர்.



Next Story