விவசாயிகளுக்கு பொருளீட்டு கடனாக ரூ.92 லட்சம்


விவசாயிகளுக்கு பொருளீட்டு கடனாக ரூ.92 லட்சம்
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் வேளாண் விற்பனைக்குழு சார்பில் விவசாயிகளுக்கு பொருளீட்டு கடனாக ரூ.92 லட்சத்தை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் வேளாண் விற்பனைக்குழு சார்பில் விவசாயிகளுக்கு பொருளீட்டு கடனாக ரூ.92 லட்சத்தை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

கடன் வழங்கும் நிகழ்ச்சி

ராமநாதபுரத்தில் வேளாண்மை விற்பனைக்குழு சார்பில் விவசாயிகளுக்கு வங்கி மூலம் பொருளீட்டு கடன் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகளுக்கு வங்கி கடனுதவிக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கி பேசியதாவது:- ராமநாதபுரம் விற்பனைக்குழு சார்பில் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், ராஜசிங்கமங்கலம், திருவாடானையில் 6 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் விவசாயிகள் விளைபொருட்களை கமிஷன், இடைத்தரகர் இன்றி விற்பனை செய்யலாம்.

உற்பத்தி அதிகரித்து விலை வீழ்ச்சியடையும் காலங்களில் அந்தந்த பகுதி விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள கிட்டங்கிகளில் இருப்பு வைத்து கொள்ளலாம். இருப்பு வைக்கப்படும் விளைபொருட்களுக்கு 1 டன்னுக்கு ரூ.1 வாடகை வசூலிக்கப்படுகிறது. மேலும் இருப்பு வைக்கப்படும் விளைபொருளின்மீது பொருளீட்டுகடன் பெறும் வசதியும் உள்ளது.

பொருளீட்டு கடன்

இருப்பு வைத்துள்ள பொருளின் மதிப்பில் 50 முதல் 75 சதவீதம் வரை 5 சதவீத வட்டியில் 6 மாதம் வரை அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை பொருளீட்டு கடனாக பெற்றுக்கொள்ளலாம். விளைபொருட்களுக்கு காப்பீடு வசதியும் உள்ளது. ராமநாதபுரம் எட்டிவயல் மிளகாய் வணிக வளாகத்தில் 2 ஆயிரம் டன் கிட்டங்கியும், பரமக்குடியில் ஆயிரம் டன்னில் 2 மற்றும் 2 ஆயிரம் டன்னில் ஒரு கிட்டங்கிகளும் உள்ளன. இவற்றை மத்திய அரசின் கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரித்து உள்ளது. இதன் மூலம் இந்த கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்படும் விளை பொருட்களுக்கு 75 சதவீதம் வரை பொருளீட்டு கடன் பெறும் வசதி உள்ளது.

அறுவடை காலத்தில் ஏற்படும் விலை வீழ்ச்சியை தவிர்க்க இந்த கிட்டங்கிகளில் இருப்பு வைத்து விற்பனைகுழு மூலம் ரூ.3 லட்சம் வரை பொருளீட்டு கடன் பெறலாம். அதற்கு மேல் தேவைப்பட்டால் வங்கிகள் மூலம் பொருளீட்டு கடன் பெறும் வசதியை விவசாயிகளும், வணிகர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

காசோலை

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட ரூ.1.21 கோடி மதிப்புள்ள 7,900 நெல் மூடைகளை எட்டிவயல் கிட்டங்கியில் இருப்பு வைத்ததன் அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு ராமநாதபுரம் சவுத் இந்தியன் வங்கி சார்பில் பொருளீட்டு கடனாக ரூ.90 லட்சத்து 72 ஆயிரத்திற்கான ஆணையினையும், ஆர்.எஸ்.மங்கலத்தில் 277 மூடை இருப்பு வைத்த விவசாயிக்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலையையும் கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, விற்பனைக்குழு செயலாளர் ராஜா, சவுத் இந்தியன் வங்கி மேலாளர் லிஜீ ஜார்ஸ், கண்காணிப்பாளர்கள் மங்கலசாமி, சரவணக்குமார், கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story