நபார்டு வங்கியில் கடன் வழங்கும் திட்டம் மாவட்ட கலெக்டர் தொடங்கி
குமரி மாவட்டத்திற்கு 2023-24-ம் ஆண்டு நபார்டு வங்கி மூலம் கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்திற்கு 2023-24-ம் ஆண்டு நபார்டு வங்கி மூலம் கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டார்.
கடன் திட்ட அறிக்கை
தமிழகத்தில் ஊரக வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கிகள் (நபார்டு வங்கி) குமரி மாவட்டத்தில் கிடைக்க பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன்மூலம் ரூ.15 ஆயிரத்து 546 கோடி அளவிற்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2023-24 ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் வெளியிட்டார்.
பின்னர் கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-
குமரி மாவட்டத்திற்கு 2023-24 ம் ஆண்டுக்கு பயிர் கடன், விவசாய முதலீடு கடன், விவசாய கட்டமைப்பு கடன், விவசாய இதர கடன்கள், சிறு, குறு நடுத்தர தொழில் கடன், ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான கடன், அடிப்படை கட்டுமான வசதி, சுய உதவிக்குழுக்கான கடன் என மொத்தம் ரூ.15 ஆயிரத்து 546 கோடி அளவுக்கு கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
முதலீடுகளுக்கு உறுதுணை
இதுபோன்ற கடன் வசதிகள், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்ற உதவும். வேளாண்மையில் எந்திரமயமாக்கல், சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல் போன்றவை விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவும். வங்கிகள் இதுபோன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை கிளை மேலாளர் வாபிரசாத், நாகர்கோவில் கிளை முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுரேஷ் ராமலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.