காவேரிப்பட்டணம் அருகேபேருஅள்ளியில் சிறுத்தை நடமாட்டம்?வனத்துறையினர் கண்காணிப்பு
காவேரிப்பட்டணம் அருகே பேருஅள்ளியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள பேருஅள்ளி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனா. தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மேலும் ஆடு, மாடுகளையும் விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இப்பகுதி அருகே மலை உள்ளதால் மலைப்பாம்புகள் அடிக்கடி கிராமத்துக்குள் வரும் சம்பவங்கள் நடந்தன.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பேருஅள்ளி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்களிடையே பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் உமாபாரத் சரவணன் கிருஷ்ணகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் பேருஅள்ளி கிராமத்துக்கு சென்று அப்பகுதியில் பதிவாகி உள்ள விலங்குகளின் கால்தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் கிராம மக்கள் யாரும் இரவு நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்றும், சிறுத்தை நடமாட்டம் இருந்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும், வனத்துறையினர் கேட்டு கொண்டனர். மேலும் ஒலிபெருக்கி மூலமும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் சம்பவத்தால் பேருஅள்ளி கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.