வாழை தோட்டத்தில் சிறுத்தைப்புலியின் கால் தடம்
வாழை தோட்டத்தில் சிறுத்தைப்புலியின் கால் தடம் பதிவாகியிருந்தது.
பவானிசாகர்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தைப்புலிகள் அதிக அளவில் உள்ளன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைப்புலிகள் அருகே உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது. இந்தநிலையில் பவானிசாகர் அருகே அணையின் நீர் தேக்க பகுதியை ஒட்டி அமைந்துள்ள சித்தன்குட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி கரியப்பன் (வயது 60) தனது தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளார். நேற்று காலை தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற கரியப்பன் தோட்டத்துக்குள் சிறுத்தைப்புலியின் கால் தடம் பதிவாகியிருந்ததை கண்டு அச்சமடைந்தார். இதுகுறித்து உடனடியாக விளாமுண்டி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை கரியப்பனின் தோட்டத்துக்கு வந்து சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள் இப்பகுதியில் தானியங்கி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.