தமிழக -கேரள எல்லை சோதனை சாவடி பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
செங்கோட்டை அருகே தமிழக -கேரள எல்லை சோதனை சாவடி பகுதியில் சிறுத்தை நடமாடியது.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, மிளா, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் அவ்வப்போது, வனப்பகுதிகளை விட்டு வெளியேறி ஊருக்குள் வரும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் செங்கோட்டை அருகே மேக்கரையில் இருந்து அச்சன்கோவில் செல்லும் சாலையில் உள்ள தமிழக -கேரள எல்லை சோதனை சாவடி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு பகலில் சிறுத்தை ஒன்று உலா வந்தது. இதை பார்த்த வன ஊழியர்கள் செல்போனில் சிறுத்தையை புகைப்பட எடுத்தனர். அப்போது, சிறுத்தை சோதனை சாவடி நோக்கி வரவே வன ஊழியர்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்த சோதனைச் சாவடி அறைக்குள் சென்றுவிட்டனர். அதன் பின்னர் சிறுத்தை அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்
மேலும், பகல் நேரங்களில் அச்சன்கோவில் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் மணலாற்றில் உள்ள நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், அச்சன்கோவிலுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும். அச்சன்கோவில் சாலையில் இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.