சிறுத்தை மர்ம சாவு; வனத்துறையினர் விசாரணை
சிறுத்தை மர்ம சாவு குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே ஓரசோலை காமராஜர் நகர் பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் கட்டபெட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் வனச்சரகர் செல்வகுமார் தலைமையில் வனவர் ராமதாஸ், வனகாப்பாளர்கள் நாகேஷ், சிவகுமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ், கோத்தகிரி கால்நடை டாக்டர் ராஜன் வரவழைக்கப்பட்டு, உதவி வன அலுவலர் சரவணகுமார் முன்னிலையில் சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதே பகுதியில் எரிக்கப்பட்டது.இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இறந்தது 6 வயதான ஆண் சிறுத்தை. சிறுத்தையின் உடலில் காயங்கள் எதுவும் தென்படவில்லை. சிறுத்தையின் உடற்கூறுகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அதன் முடிவு வந்த பின்னரே சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என்றனர்.