பவானிசாகர் அருகே சிறுத்தை மீண்டும் அட்டகாசம்: கட்டி வைத்திருந்த பசுமாட்டை கடித்து கொன்றது


பவானிசாகர் அருகே சிறுத்தை மீண்டும் அட்டகாசம்: கட்டி வைத்திருந்த பசுமாட்டை கடித்து கொன்றது
x
தினத்தந்தி 26 Jun 2022 3:07 AM IST (Updated: 26 Jun 2022 3:15 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அருகே சிறுத்தை மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டது. கட்டி வைத்திருந்த பசுமாட்டை கடித்து கொன்றது.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அருகே கட்டி வைத்திருந்த பசுமாட்டை கடித்து கொன்று சிறுத்தை மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

சிறுத்தை கொன்றது

பவானிசாகர் அருகே உள்ள ராஜன்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது 65). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தனியாக வசித்து வருகிறார். சொந்தமாக ஒரு பசுமாடும் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் ராஜம்மாள் வெளியூரில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டுக்கு அருகே கட்டி வைத்திருந்த பசுமாட்டை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பக்கத்து தோட்டங்களில் தேடிப்பார்த்தார். அப்போது அருகே உள்ள பருத்தி தோட்டத்துக்குள் உடலில் படுகாயங்களுடன் ரத்தம் வழிய பசுமாடு செத்துக்கிடந்தது. உடனே இதுபற்றி பவானிசாகர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையில் வன ஊழியர்கள் வந்து பார்த்தார்கள். அதன்பின்னர் அங்கு பதிவாகியிருந்த கால் தடயங்களை வைத்து பசுமாட்டை கடித்து கொன்றது சிறுத்தை என்று கூறினார்கள். பசுமாட்டை கொன்றபின்னர் அதை பருத்தி தோட்டத்துக்கு இழுத்து வந்து போட்டுள்ளது என்றார்கள்.

விவசாயிகள் அச்சம்

இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அறிவுரையின் பேரில் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக தானியங்கி கேமரா பொருத்தப்பட்டது. மேலும் பசு மாட்டின் உரிமையாளர் ராஜம்மாளுக்கு வனத்துறை சார்பில் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

அரசு சார்பில் இழப்பீடு பெறுவதற்கும் வனத்துறையினர் பரிந்துரை செய்வதாக ராஜம்மாளிடம் கூறினார்கள். ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுப்பீர்கடவு பகுதியில் சுப்புராஜ் என்பவருடைய கன்று குட்டியை சிறுத்தை அடித்துக்கொன்றுள்ளது. இந்தநிலையில் மீண்டும் சிறுத்தை ராஜன்நகர் பகுதியில் பசுமாட்டை வேட்டையாடி உள்ளதால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளார்கள்.


Next Story