100 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தை: 3½ மணி நேரத்திற்கு பிறகு மீட்பு


100 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தை: 3½ மணி நேரத்திற்கு பிறகு மீட்பு
x

தேனி அருகே 100 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தையை தீயணைப்பு படையினர் 3½ மணி நேரத்திற்கு பிறகு மீட்டனர்.

தேனி,

தேனி அருகே பூதிப்புரம் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. நேற்று இந்த ஊரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் மலையடிவாரத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் இருக்கும் கிணற்றுக்குள் சிறுத்தை தண்ணீருக்குள் தத்தளித்தபடி உருமிக்கொண்டு இருந்தது. இதை அங்கு வந்த விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் விவசாயிகள் தகவல் கொடுத்தனர்.

மீட்பு பணி

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அந்த கிணறு சுமார் 100 அடி ஆழம் கொண்டது. கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை அங்கிருந்த ஒரு கம்பியை தொற்றிக் கொண்டு இருந்தது. இந்தநிலையில், சிறுத்தை கிணற்றில் இருந்து மேலே ஏறி வருவதற்காக தீயணைப்பு படையினர் கயிறு ஏணியை கிணற்றுக்குள் இறக்கினர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, கிணற்றுக்குள் வலையை வீசி சிறுத்தையை தீயணைப்பு படையினர் பிடித்தனர். அதை மெதுவாக மேலே தூக்கினர். அப்போது அவர்களை அச்சுறுத்தும் வகையில் சிறுத்தை சத்தம் எழுப்பியது. வலை கிணற்றின் மேலே வந்த போது அதற்குள் இருந்த சிறுத்தை லாவகமாக வெளியே பாய்ந்தது. பின்னர் மின்னல் வேகத்தில் அது மலைப்பகுதியை நோக்கி ஓடியது.

3½ மணி நேரம்

இந்த மீட்பு பணி மாலை 5.30 மணி வரை நடந்தது. சுமார் 3½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுத்தை மீட்கப்பட்டது.

இந்த சிறுத்தைக்கு 2 வயது இருக்கும் என்றும், தண்ணீர் தேடியோ அல்லது ஏதாவது விலங்கை வேட்டையாடுவதற்காக துரத்தி வந்தபோதோ கிணற்றுக்குள் தவறி விழுந்து இருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story