லெப்பைக்குடிகாடு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
லெப்பைக்குடிகாடு பேரூராட்சி அலுவலகம் முற்றுகையிட்டனர்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள கீழக்குடிகாடு வெள்ளாற்று தடுப்பணைகளில் இருந்து 73 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதற்காக தமிழக அரசு வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டம் என்ற திட்டத்தை தொடங்கி 70 சதவீத பணிகள் முடிந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் மற்றும் லெப்பைக்குடிகாடு பொதுமக்கள் வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தை வேறு பகுதியில் தொடங்கக்கோரியும், பேரூராட்சி, கிராம சபை கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் பணிகளை தடுத்து நிறுத்தக்கோரியும், இது தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சார்பில் பேரூராட்சி தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் நேற்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மங்களமேடு உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சீராளன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.