குறைதீர் கூட்டத்தில் புகார் அளிக்க ஆர்வம் குறைவு
ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் புகார் அளிக்க பொதுமக்களிடம் ஆர்வம் குறைந்து உள்ளது.
தமிழக காவல்துறை டி.ஜி.பி. மாவட்டங்கள் தோறும் காவல்துறையின் சார்பில் மக்கள் குறைதீர் முகாம்கள் நடத்த உத்தரவிட்டுள்ளார். இதன்படி ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் நடைபெற்று வரும் இந்த குறைதீர் கூட்டத்தில் ஓரிரு வாரங்கள் மக்கள் அதிக ஆர்வமுடன் திரளாக வந்து மனு அளித்தனர். புத்தாண்டு பிறப்பு, பொங்கல் பண்டிகை என அடுத்தடுத்த விழா காலம் என்பதால் கடந்த சில வாரங்களாக மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு புகார் அளிக்க வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த ஓரிரு வாரங்களாக குறைதீர் கூட்டத்திற்கு அதிகளவில் மக்கள் மனு அளிக்க வரவில்லை. புகார் கொடுக்க மக்களின் ஆர்வம் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திலும் 55 மனுக்கள் என்ற அளவில் பெறப்பட்டுள்ளன. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இந்த மனுக்கள் பெறப்பட்டது. கடந்த 3 வாரங்களாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் மனு கொடுக்க வந்து அவர் இல்லாமல் பலர் திரும்பி செல்வதாக கூறப்படுகிறது.