6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் பாடத்தை நீக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் பாடத்தை நீக்க வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சீட்டுக்கட்டு
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் 6-ம் வகுப்புக்கான 3-வது பருவ கணிதப் பாடப்புத்தகத்தில் முழுக்கள் என்ற தலைப்பிலான பாடம் சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. முழுக்கள் என்ற தலைப்பிலான கணிதப் பாடம் முழு எண்களைக் கொண்டு கூட்டல் மற்றும் கழித்தலை விளையாட்டு வடிவத்தில் கற்றுத் தருவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
ஆனால், எந்த எண்ணுடன் எந்த எண்ணைக் கூட்டுவது, எந்த எண்ணை கழிப்பது என்பதை சீட்டுக்கட்டுகள் மூலமாக அந்தப் பாடம் கற்றுத் தருவது தான் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். பாடத்தில் சீட்டுக்கட்டுகள் படத்தை அச்சிட்டு அதை 2 மாணவர்கள் விளையாடுவதைப் போலவும், இடையில் ஆசிரியர் தலையிட்டு எவ்வாறு விளையாடுவது என்பதை கற்றுக்கொடுப்பது போலவும் முழுக்கள் பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடத்தின் நோக்கம் என்னவாக இருந்தாலும், அதற்காக சீட்டுக்கட்டு பயன்படுத்தப்பட்டு இருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சீட்டுக்கட்டுகள் என்றாலே சூதாட்டம்தான் நினைவுக்கு வரும். இதனால், பின்னாளில் மாணவர்கள் வளர்ந்த பின் சூதாட்டத்திற்கு அடிமையாகும் வாய்ப்புகள் இருப்பதை எவரும் மறுக்க முடியாது.
நீக்க வேண்டும்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்; அதன் தீய விளைவுகளில் இருந்து இளைஞர்கள் மற்றும் மாணவர்களை மீட்க வேண்டும் என்று போராடி வரும் நிலையில், மாணவர்களுக்கு சூதாட்டம் குறித்த சிந்தனையைத் தூண்டும் பாடத்தை அனுமதிக்கக்கூடாது; அந்த பாடத்தை உடனடியாக நீக்க வேண்டும். அந்த பாடத்தை நீக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 14-ந்தேதியே வலியுறுத்தி இருந்தேன். ஆனால், நடப்புக் கல்வியாண்டிலும் அந்த பாடம் தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். 3-ம் பருவம் வரும் ஜனவரி மாதத்தில் தான் தொடங்குகிறது. அதற்கு முன்பாக சூதாட்டத்தை ஊக்குவிக்கும் முழுக்கள் பாடத்தை பாடபுத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பணி நிலைப்பு
டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், அதே திட்டத்தில் பணியாற்றும் சிறப்பாசிரியர்களுக்கு இந்த ஊதிய உயர்வு மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரையும் காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு செய்ய வேண்டும். அதுவரை அவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.