ஒரே அறையில் 2 வகுப்பு மாணவர்களுக்கு பாடம்: சீலநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு


ஒரே அறையில் 2 வகுப்பு மாணவர்களுக்கு பாடம்: சீலநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு
x

சேலம் சீலநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒரே அறையில் 2 வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வந்ததால், அங்கு நேற்று கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சேலம்

உயர்நிலைப்பள்ளி

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 12 ஆசிரிய, ஆசிரியைகள் பணியில் உள்ளனர். 5 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் சேர்த்து மொத்தம் 5 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன.

ஆனால் வகுப்பறை பற்றாக்குறையால் ஒரே அறையில் 2 வகுப்பு மாணவர்களை அமரவைத்து அவர்களுக்கு 2 ஆசிரியைகள் தனித்தனியாக பாடங்களை சொல்லி கொடுக்கும் நிலைமை இருந்து வருகிறது. குறிப்பாக ஒரே பிளாக் போர்டையும் 2 ஆசிரியைகள் பயன்படுத்தி இட நெருக்கடியில் மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதால் மாணவ, மாணவிகள் தங்களது பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

மரத்தடியில் பாடம்

மேலும் தினமும் ஒரு வகுப்பு மாணவ, மாணவிகள் வெளியில் மரத்தடியில் அமர்ந்து பாடம் படித்து வருகின்றனர். இதனால் வெயில் மற்றும் மழை காலங்களில் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட சேலம் சீலநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, எத்தனை வகுப்பறைகள் உள்ளன? கூடுதல் கட்டிடங்கள் எத்தனை தேவை? மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வசதிகள் உள்ளதா? என்பது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை சாரதா மணியிடம் கேட்டறிந்தனர்.

மேலும், ஒரு அறையில் 2 வகுப்பு மாணவர்களை அமர வைத்து ஏன் பாடம் எடுக்கப்பட்டது? அவ்வாறு நடத்தினால் குழப்பம் ஏற்படாதா? என்பது குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூடுதல் வகுப்பறைகள்

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், சேலம் சீலநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி மாநகராட்சி கட்டுப்பாட்டில் வருகிறது. சமீபத்தில் பள்ளியில் பேவர் பிளாக் கற்கள் பதிப்பு, டைல்ஸ் ஒட்டியது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கட்டிடங்கள் பற்றாக்குறையால் மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் பள்ளிக்கு தேவையான கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர கல்வித்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.


Next Story