தமிழ்நாட்டை இந்திய நாட்டின் விளையாட்டு தலைநகரமாக மாற்றுவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


தமிழ்நாட்டை இந்திய நாட்டின் விளையாட்டு தலைநகரமாக மாற்றுவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x

தமிழ்நாட்டை இந்திய நாட்டின் விளையாட்டு தலைநகரமாக மாற்றுவோம் என்றும், முதற்கட்டமாக 10 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு மினி விளையாட்டு அரங்கம் கட்டப்படும் என்றும் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் நேரு இளையோர் மையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 3.25 லட்சம் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இவ்வளவு வீரர், வீராங்கனைகளை நம்மால் கையாளக்கூடிய அளவிற்கு விளையாட்டு கட்டமைப்பு உள்ளது என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது.

மினி விளையாட்டு அரங்கம்

முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் 10 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு மினி விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. அதேபோல். எளிய பின்னணியில் இருந்து வரும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்க அவர்களது பொருளாதார தேவைகளை நிறைவு செய்ய முதன் முறையாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு போட்டிகளையும் தெளிவான திட்டமிடுதலோடு நடத்தக்கூடிய திறமை பெற்றவர்கள் என்பதை நிரூபித்து செஸ் ஒலிம்பியாட், ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப், சர்வதேச ஸ்குவாஷ், சர்வதேச அலை சறுக்கு போட்டி என பல்வேறு சர்வதேச போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்.

வரும் வாரங்களில், எச்.சி.எல். நிறுவனத்துடன் இணைந்து சைக்ளத்தான் போட்டியினை நடத்த உள்ளோம். சென்னை பார்முலா ரேசிங் சர்க்யூட் உள்ளிட்ட பல சர்வதேச போட்டிகளையும் நடத்த உள்ளோம். குளோபல் ஸ்போர்ட் சிட்டி ஒலிம்பிக் அக்காடமிகளையும் தொடங்க உள்ளோம். வருகிற ஜனவரி மாதம் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை நடத்த உள்ளோம். இதற்காக 36 மையங்கள் தொடங்கப்பட உள்ளது.

விளையாட்டு தலைநகரம்

தமிழ்நாட்டை இந்திய நாட்டின் விளையாட்டு தலைநகரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு அரசுடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உழைத்து வருகிறது. தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு 2021-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.65 கோடி வழங்கி உள்ளோம். நாட்டு நலப் பணித்திட்டத்திற்காக முதல்-அமைச்சர் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வு கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர், தேசிய மாணவர் படைத் துணைத் தலைமை இயக்குனர் அதுல் குமார் ரஸ்தோகி, நேரு யுவ கேந்திரா மாநில இயக்குனர் குன்ஹமது, நாட்டு நலப்பணித்திட்ட மாநில அலுவலர் ம.செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story