வலைத்தள வலைகளில் விழாமல் இருப்போம்:'சைபர்' குற்றங்களை 'சைபர்' ஆக்குவோம்
வலைத்தள வலைகளில் விழாமல் இருப்பதன் மூலம் ‘சைபர்' குற்றங்களை ‘சைபர்' ஆக்க முடியும்.
'சைபர்' குற்றம் என்றால் என்ன தெரியுமா?
சாலையில் நடந்து போகிறோம். எதிரே வந்து ஒருவர் திடீர் என்று கத்தியைக் காட்டி மிரட்டி, 'சத்தம் போட்ட குத்திக்கொன்றுடுவேன். எடு மணிப் பர்சை" என்கிறார். பயத்தால் பர்சை கொடுக்கிறோம், அவர் பறந்துவிடுகிறார். இதை வழிப்பறி என்கிறோம். இதுபோன்ற செயல்களை மனிதர்கள் செய்வதால், இதை மனிதக்குற்றம் என்று சொல்லலாம்.
கம்ப்யூட்டர், செல்போன்கள் உதவியோடு வலைத்தள வழிகளில் இதுபோன்று நடைபெறுவதுதான் தொழில்நுட்ப வழிப்பறி. இதை சைபர் குற்றம் என்கிறோம்.
இந்த இரண்டு வழிப்பறிகளையும் மனிதர்கள்தான் செய்கிறார்கள். முதல் வழிப்பறியை மனிதன் நேரடியாகச் செய்கிறான். இரண்டாவதை தொழில்நுட்பங்களில் நுழைந்து அவனே செய்கிறான். இரண்டிலும் நாம் பணத்தை இழக்கிறோம். பயமுறுத்தப்படுகிறோம். அவமானப் படுகிறோம்.
சைபர் குற்றங்கள் அதிகரிப்பு
இன்று மின்னணு தொழில்நுட்பம் (டிஜிட்டல் டெக்னாலஜி) வளர்ந்து, இணைய தளத்தின் பயன்பாடு எழுச்சி அடைந்து வருவதுடன், சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.
* வங்கி ஏ.டி.எம். கார்டு காலாவதியாக போகிறது. அதனை புதுப்பிப்பதற்கு உங்களது ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய குறியீடு எண்ணை கொடுங்கள் என்று தமிழ் கலந்த இந்தியில் பேசி வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகிறார்கள்.
அவர்கள் வங்கியில் இருந்துதான் பேசுகிறார்கள் என்று நினைத்து ரகசிய குறியீடு எண்களை கொடுத்து, பணத்தை இழந்தவர்கள் ஏராளம்.
* வங்கியில் ஆதார் கார்டு எண்ணை இணைக்காவிட்டால், வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுவிடும், மின் கட்டணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் மின் சேவை நிறுத்தப்படும், போக்குவரத்து விதிமீறல் அபராத கட்டணத்தை செலுத்துங்கள் என செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இ-மெயிலுக்கு அனுப்பும் மோசடி 'லிங்க்'குகள் மூலம் நிழல் உலகில் இருந்து கொண்டு மோசடி மன்னர்கள் பணம் பறித்து வருகிறார்கள்.
* நெட் பேங்கிங் வசதி துண்டிக்கப்பட்டுவிடும், பகுதி நேர வேலைவாய்ப்பு, ஆன்லைன் திருமண மோசடி, ஆபாச வீடியோ கால் அழைப்பு, முக்கிய பிரமுகரின் பெயரில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை தொடங்கி, அந்த நபரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் பறித்தல் என மாறு வேடங்களில் நம்மை சுற்றியே அலைகிறது சைபர் குற்றங்கள்.
* கேரளாவில் 68 வயது முதியவரை சமூக ஊடகம் மூலம் உல்லாச வலையில் வீழ்த்தி ரூ.23 லட்சம் பறித்த ரஷிதா என்ற பெண் சிறைச்சாலையில் தற்போது கம்பி எண்ணுகிறார்.
* கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியை பார்ப்பதற்கு 50 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்குவதாக 'லிங்க்' ஒன்றை சமூக ஊடகங்களில் மோசடிக்காரர்கள் அனுப்பினார்கள். இதன் தீய நோக்கத்தை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசார் எச்சரித்தனர்.
சைபர் கிரைம் குற்றவாளிகள், ஆசையை தூண்டும் விதமாக தூண்டிலை வீசி, அதில் மாட்டிக்கொள்பவர்களை லாவகமாக அமுக்கிவிடுகிறார்கள். இதனால் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை, பலர் நொடிப்பொழுதில் இழந்து தவிக்கிறார்கள்.
சிலந்தி வலை போன்று பின்னிக்கிடக்கும் இணைய வலையில், விழுந்தால் நாம் இழப்பது பணம் மட்டும் அல்ல மானமும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. 'சைபர் கிரைம்' குற்றவாளிகள் உள்ளூர் முதல் சர்வதேச அளவில் பல கொள்ளை கும்பல்கள் செயல்படுகின்றன. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் யார்? என்று அடையாளம் காண்பதில்தான் சிக்கல் இருக்கிறது.
புதுப்புது அவதாரம் எடுக்கும் சைபர் கிரைம் குற்றவாளிகளை ஒடுக்குவது என்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலான பணியாகும். எனவே பொதுமக்கள்தான் சைபர் கிரைம் என்ற மாய வலையில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். அப்போதுதான் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையை சைபர் (பூஜியம்) ஆக்கமுடியும்.
சைபர் குற்றங்கள், அதன் பாதிப்புகள், தடுக்கும் வழிமுறைகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
கவனமாக இருக்கவேண்டும்
சேலம் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன்:- இன்றைய காலக்கட்டதில் அனைவரும் செல்போன்கள் மூலம் சமூக வலைதளங்களில் மூழ்கிகிடக்கிறார்கள். பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்தால் நம்முடைய பணம் பறிபோகும் அபாயம் உள்ளது. குறிப்பாக ஆன்லைன் டாஸ்க் மூலமாகத்தான் அதிக நபர்கள் தங்களது பணத்தை ஏமாறுவதாக புகார்கள் வருகிறது. எனவே, செல்போன் எண்ணுக்கு 'லிங்க்' உடன் வரும் குறுந்தகவலில் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும். வங்கி கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிடக்கூடாது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் சைபர் கிரைம் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்.
விழிப்புணர்வு இல்லை
சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த வக்கீல் அகமது ஷாஜகான்:- பொதுவாக மக்களிடம் சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு இல்லை. இதனால் அதன் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. செல்போன் எண்களுக்கு பரிசு விழுந்திருப்பதாக குறுந்தகவல் வரலாம். அதேபோல் வங்கியில் இருந்து பேசுவதாகவும் மெசெஜ் அனுப்பலாம். அவ்வாறு வந்தால் யாரும் தங்களது வங்கி கணக்கு விவரம், ஆதார் எண், ஓ.டி.பி.எண் போன்றவற்றை பகிர கூடாது. நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதாவது சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரில் சென்று விசாரிக்க வேண்டும். குற்றவாளிகள் எப்போதும் குற்றம் செய்வதற்கு புதுப்புது வழிகளை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். எனவே நம் பாதுகாப்பு என்பது நம் கைகளில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவதே புத்திசாலித்தனமாக இருக்கும்.
குறுஞ்செய்தி வித்தியாசம்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தமிழழகன்:- இன்றைய கால கட்டத்தில் அறிமுகம் இல்லாதவர்களிடம் வங்கி கணக்கு எண், ஆதார் எண்களை கொடுக்க கூடாது. வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு எண், ஆதார் எண்களை கேட்க மாட்டார்கள். காரணம் வாடிக்கையாளரின் அனைத்து விவரங்களும் வங்கியில் இருக்கும். தேவை என்றால் அவர்களிடம் இருக்கும் சான்றிதழ்களை பார்த்துக்கொள்வார்கள். எனவே வங்கியில் இருந்து பேசுவதாக கூறுபவர்களிடம், நேரில் வாருங்கள் என்று கூறினால் அதன் பிறகு அவர்கள் மீண்டும் தொடர்பு கொள்ள தயங்குவார்கள். மேலும் வங்கியில் இருந்து வரும் குறுஞ்செய்திக்கும், மோசடி செய்பவர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்திக்கும் வித்தியாசம் இருக்கும். அதை வைத்தே மக்கள் எது உண்மையானது, எது பொய்யானது என்று தெரிந்து கொள்ளலாம். எனவே போலி நபர்களிடம் இருந்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
புகார் தர வேண்டும்
சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள்:- சமூக ஊடகம் என்பது பரந்து விரிந்தது. அதில் பெண் என்ற பெயரில் ஆண் கூட இருக்கலாம். அதனால் யாரிடமும் பழகும்போது குறிப்பாக பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். யாராவது தனிப்பட்ட படங்களை திருடி 'மார்பிங்' செய்து, 'பிளாக்மெயில்' செய்தால் சைபர் கிரைம் போலீசில் தைரியமாக புகார் தெரிவிக்க வேண்டும். புகார் தெரிவிப்பவர்கள் வேண்டுகோள் விடுத்தால், அவர்களின் தனிப்பட்ட ரகசியங்கள் காக்கப்படும். தற்போது புதுப்புது மோசடி நடப்பதாக புகார்கள் வருகின்றன. எனவே வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களை மிகவும் கவனமுடன் கையாள வேண்டும். முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் 'லிங்க்'குகளை ஒருபோதும் திறக்கக்கூடாது. பொதுமக்கள் விழிப்புணர்வாக இருந்தால் சைபர் குற்றங்களை தவிர்க்கலாம்.
நூதன முறையில் மோசடி
மல்லூரை சேர்ந்த சமூக ஆர்வலர் அருள் ஆனந்த்:- ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தற்பொழுது பெருமளவில் அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால் சைபர் கிரைம் போலீசாரே கண்டுபிடிக்க முடியாதபடி ஆன்லைன் மோசடியாளர்கள் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். படித்த இளைஞர்கள், தங்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆன்லைனில் நடக்கும் மோசடிகள் குறித்து தகவல் பரிமாற்றம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
கடும் தண்டனை
மோசடியால் பணத்தை இழந்த கன்னங்குறிச்சியை சேர்ந்த ராஜூ கணேஷ்:-
நான் பூ வியாபாரம் செய்து வருகிறேன். எனது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், அதை புதுப்பிக்க அதில் தெரிவிக்கப்பட்டிருந்த லிங்கில் பான் கார்டை அப்டேட் செய்யுமாறு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அது உண்மை என்று நம்பி தன்னுடைய வங்கி கணக்கு விவரங்கள், செல்போன் எண்ணுக்கு வந்த ஓ.டி.பி.விவரத்தை பதிவு செய்தவுடன் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்து 538 மோசடியாக எடுக்கப்பட்டது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தேன். பின்னர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தேன். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப கிடைக்க ஏற்பாடு செய்தனர். இதுபோன்ற வழக்குகளை வேகமாக புலன்விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.