விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் சுவர் விளம்பரத்தை அவமதிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பா.ம.க.விற்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுவர் விளம்பரம் அவமதிப்பு
தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் 60-வது பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து அக்கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுவர் விளம்பரம், பேனர், நோட்டீஸ், சுவரொட்டிகள் மூலம் விளம்பரப்படுத்தி வருகின்றனர். அதன்படி ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி புறவழிச்சாலை மேம்பால சுற்றுச்சுவரில் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விளம்பரப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் அந்த விளம்பரத்தை யாரோ மர்ம நபர்கள் சிலர் சாணியை வாரி இறைத்து அதனை அழித்து அவமதிப்பு செய்துள்ளனர்.
சாலை மறியல்
இதனை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த சம்பவத்திற்கு பா.ம.கவே காரணம். அக்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
மனு
இதில் உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் முன்னாள் மாவட்ட துணைச்செயலாளரும், மாவட்ட அமைப்பாளருமான குமார், தா.பழூர் ஒன்றிய செயலாளர் தங்கராசு, ஒன்றிய அமைப்பாளர் மாதவன், ஜெயங்கொண்டம் ஒன்றிய அமைப்பாளர் பூராசாமி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், பின்னர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திடம் புகார் மனு அளித்தனர். இந்த சம்பவம் காரணமாக ஜெயங்கொண்டம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.